ADDED : டிச 26, 2024 01:47 AM
சென்னை : கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களும், கூட்டுறவு பண்டக சாலைகளும், பல் பொருள் அங்காடிகள் மற்றும் காய்கறி கடைகளை நடத்துகின்றன. அவற்றில் மாதம், 500, 1,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கும்படி, ரேஷன் கடையை உள்ளடக்கிய கூட்டுறவு சங்கங்களில், பணிபுரியும் ஊழியர்களை கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுகின்றன.
இந்நிலையில், கூட்டுறவு அங்காடிகளில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 199 ரூபாய், 499 ரூபாய், 999 ரூபாய்க்கு மளிகை தொகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அவற்றின் விற்பனை, கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக கடந்த வாரம் துவங்கியது.
சென்னையில் 20,000 தொகுப்புகள், மற்ற மாவட்டங்களில் தலா, 1,000 முதல், 5,000 வரை என, மாநிலம் முழுதும், ஒரு லட்சம் மளிகை தொகுப்புகள் விற்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த தொகுப்புகளை வாங்கும்படி, ரேஷன் ஊழியர்களை, கூட்டுறவு சங்க அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து, மளிகை தொகுப்புகள் வாங்கும்படி ரேஷன் ஊழியர்கள் மற்றும் சங்க பணியாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என, கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.