ராவணன் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது; சீமான் கொந்தளிப்பு
ராவணன் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது; சீமான் கொந்தளிப்பு
ADDED : அக் 18, 2024 12:52 PM

சென்னை: ராவணன் அவமதிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீமான் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வரும் அக்டோபர் 27ம் தேதி ராவண வதம் என்ற பெயரில் சிலர் நிகழ்வு ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ்கொண்டவன் எங்கள் ராவணப் பெரும்பாட்டன். பத்து கலை என்பதை பத்து தலை எனத் திரித்து கதைகளை கட்டமைத்து அருவருக்கத்தக்க தோற்றத்தை உருவாக்கி அவமதித்ததோடு, தொல்தமிழ் மூதாதை ராவணப்பெரும்பாட்டன் உருவத்தை எரிப்பதை ஒவ்வொரு ஆண்டும் விழாவாகக் கொண்டாடுவதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதன்று.
பண்பாட்டு பாசறை
உலகின் எந்த மூலையில், எந்த வடிவில் தமிழர் மூதாதை ராவணப்பாட்டன் இழிவுப்படுத்தப்பட்டாலும் அது உலகத்தமிழர் அனைவரையும் அவமதிப்பதற்கு ஒப்பாகும். மானத்தமிழினம் அதனை இனியும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன். நாம் தமிழர் கட்சி தம்முடைய பண்பாட்டு பாசறையான வீரத்தமிழர் முன்னணி மூலம் உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் ராவணப்பெருவிழாவை விரைவில் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தவறான செயல்
ஆகவே, ஆஸ்ரேலிய வாழ் தமிழ்ச்சொந்தங்கள் ஓர்மையுடன், ஓரணியில் ஒன்றுதிரண்டு, ராவணப்பெரும்பாட்டனை அவமதிக்கும் கொடுஞ்செயலைத் தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தங்களது நடவடிக்கை உலகத்தமிழர் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் தவறான செயல் என்பதை ராவண வதம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக உணர்ந்து, நிகழ்வுப் பணிகளை நிறுத்த வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.