ADDED : அக் 25, 2024 09:57 PM
சென்னை:''கட்சியின் அமைப்பு தேர்தல் நடத்த, கால அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது; நவ., 11 முதல் 30ம் தேதி வரை, அனைத்து கிளைகளுக்கும், தலைவர்கள் மற்றும் நிர்வாக குழுவினர் நியமிக்கப்படுவர்,'' என, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராஜா தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., உள்கட்சி தேர்தல் தொடர்பாக, மாநில ஆலோசனைக் குழு கூட்டம், சென்னை, அமைந்தகரையில் நேற்று நடந்தது. இதில், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், ராஜா அளித்த பேட்டி:
தமிழக மக்கள், தி.மு.க.,வை நன்கு புரிந்துள்ளனர். பஞ்சாப் போல் தமிழகமும், நாட்டின் எல்லையை ஒட்டிய மாநிலம். இங்கும் பிரிவினைவாத சக்திகள் நிறைய உள்ளன. இதையெல்லாம் கண்டறிந்து முறையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றால், தமிழகத்துக்கான கவர்னராக ரவியே இருக்க வேண்டும்; இல்லை அவர் போன்றவர்தான் இருக்க வேண்டும்.
தமிழக பா.ஜ., அமைப்பு தேர்தல் நடத்துவது தொடர்பாக, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கிளை, மண்டலத் தலைவர் மற்றும் அதற்கு மேற்பட்ட அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும். கட்சியில் ஒரு தீவிர உறுப்பினர், 50 உறுப்பினர்களை சேர்த்திருக்க வேண்டும். ஒரு ஓட்டுச்சாவடியில், 50 உறுப்பினர் இருந்தால்தான் அது அங்கீகரிக்கப்பட்ட கிளையாக இருக்கும்.
அமைப்பு தேர்தல் நடத்துவதற்கு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது. வரும் நவ., 11 முதல், 30ம் தேதி வரை, அனைத்து கிளைகளுக்கும், தலைவர்கள் மற்றும் நிர்வாகக் குழு நியமிக்கப்படும். நிர்வாக குழுவில், மூன்று பெண்கள் உட்பட, 11 பேர் இடம் பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.