வன்கொடுமை வழக்குகளில் மேல்முறையீடு செய்யுங்கள் * அரசுக்கு ரவிகுமார் வலியுறுத்தல்
வன்கொடுமை வழக்குகளில் மேல்முறையீடு செய்யுங்கள் * அரசுக்கு ரவிகுமார் வலியுறுத்தல்
ADDED : மார் 29, 2025 06:33 PM
சென்னை:'தமிழகத்தில் எஸ்.சி., -- எஸ்.டி., சமூகத்தினர் மீதான வன்கொடுமை வழக்குகளில், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விழுப்புரத்தில் உள்ள எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர் மீதான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில், இரண்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
சரவணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தலித் குடியிருப்பு தாக்கப்பட்ட வழக்கில், 96 பேரும், மரக்காணம் கலவர வழக்கில், 20 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பது ஒரு சிறப்பு சட்டம், அதன் கீழ் பதியப்படும் வழக்குகள், சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்படுகின்றன. குற்றவாளிகள் எளிதில் தப்பி விடக் கூடாது என்பதற்காக, இச்சட்டம் எழுதப்பட்டது. ஆனால், வன்கொடுமை வழக்குகளில் தண்டனை கொடுப்பதோ மிக மிக குறைவாக உள்ளது. வழக்கை நடத்தும் அரசு தரப்பே, இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
சிறப்பு நீதிமன்றங்களில் விடுதலை செய்யப்படும் கலவர வழக்குகளிலும், கொலை வழக்குகளிலும் உடனடியாக உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.