கால்பந்தாட்ட சங்கத்திற்கு ஆகஸ்ட் 31க்குள் மறு தேர்தல்
கால்பந்தாட்ட சங்கத்திற்கு ஆகஸ்ட் 31க்குள் மறு தேர்தல்
ADDED : ஜூலை 11, 2025 09:49 PM
சென்னை:'தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கு மே மாதம் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது' என அறிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 31க்குள் மறு தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டுஉள்ளது.
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கு, கடந்த மே 31ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், விதிகளுக்கு மாறாக ஏற்கனவே உள்ள 22 உறுப்பினர்களுடன், சென்னை, நெல்லை, கோவை மற்றும் திருச்சியைச் சேர்ந்த நான்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாவட்ட கால்பந்தாட்ட சங்கங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
விதிகளுக்கு எதிராக தேர்தல் நடந்துள்ளதால், மே 31ல் நடந்த தேர்தல் செல்லாது; மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். சங்க விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் நடத்த வேண்டும்.
கால்பந்தாட்ட சங்க சட்ட விதிகளின்படி, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகளை முடித்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.