UPDATED : அக் 03, 2025 03:19 PM
ADDED : அக் 02, 2025 05:56 PM
தினமலர் ஐந்தாவது பதிப்பை ஈரோட்டில் 1984ல் முதல்வர் எம்ஜிஆர் தொடங்கி வைத்தார். வரவேற்புரை நிகழ்த்திய தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பழைய வரலாறை முதல்வருக்காக விவரித்தார்:
நாஞ்சில் தமிழர்களின் நலனுக்காக திருவனந்தபுரத்தில் தினமலர் துவக்கப்பட்டது. மொழி வழி மாநில போராட்டம் நடந்தபோது, தமிழர்களின் குரலாக ஒலித்தது தினமலர்.
அதற்காக தினமலரை நசுக்க அங்கிருந்த முதல் மந்திரி பட்டம் தாணுப்பிள்ளை கடுமையான வழிகளை மேற்கொண்டார். அதையெல்லாம் எதிர்கொண்டு, போராட்டம் வெற்றி பெறும் வரை நிலத்து நின்று, பிறகுதான் திருநெல்வேலிக்கு வந்தோம்.
ஆனால், முதல்வர் அண்ணாதுரை இறந்த பின் அமைந்த புதிய அரசு, தினமலரை ஒடுக்கவும் முடக்கவும் அனைத்தையும் செய்தது. தினமலர் வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டம் 1969 முதல் 76 வரையிலான காலம் தான்.
எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், தமிழக அரசு விளம்பரங்களை தினமலருக்கு தராமல் நிறுத்தினர்.
தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் போராடிய பத்திரிக்கையை பள்ளிகளிலும், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களிலும் வாங்க கூடாது என்று தடை விதித்தது. விற்பனையாளர்கள், ஊழியர்களுக்கு பல வகையில் தொல்லை தரப்பட்டது.
ஆனால், சோதனையான கட்டங்களில் எல்லாம் வாசகர்கள் தினமலருக்கு அரணாக இருந்தனர். அரசு விளம்பரமே இல்லாமல் பத்திரிகை நடத்த முடியும் என்று மக்களே அரசுக்கு பாடம் கற்றுத் தந்தனர் என்றார்.