UPDATED : அக் 03, 2025 03:19 PM
ADDED : அக் 02, 2025 05:55 PM

1957 ஏப்ரல் 12ம் தேதி, திருவனந்தபுரம் தினமலர் இதழில் ஓர் அறிவிப்பு வெளியாகிறது.
அறிவிப்பு
ஏப்ரல் 15, '57 திங்கள் கிழமையில் இருந்து, திருநெல்வேலியில் இருந்து தினமலர் வெளியாகும். அதற்கான காரியாலய மாற்றங்கள் நிமித்தம், நாளையும் மறுநாளும் தினமலர் வெளிவராது. திங்கள் முதல் வழக்கம் போல திருநெல்வேலியில் இருந்து தினமலர் தினமும் காலையில் வெளியாகும்.
மேனேஜர், தினமலர்.
இந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியம் தந்தது. பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சோமயாஜுலு சொல்கிறார்:
அச்சு எந்திரம், அச்சு கோர்ப்பதற்கான பொருட்கள், அச்சிடுவதற்கான அனைத்து தளவாடங்கள் இவை எல்லாவற்றையும் 100 மைல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு கொண்டு செல்ல 2 வாரமாவது ஆகும், இவர் எப்படி 2 நாளில் அங்கிருந்து அச்சிடுவார்? என்று திகைப்பாக இருந்தது.
ஆனால் அதுதான் ராமசுப்பையர். இது முடியாது, சாத்தியப்படாது என்று மற்றவர்கள் விலகிப் போகிற விஷயங்களை கையில் எடுத்து, இது முடியும், சாத்தியமே என்று நிரூபிப்பது அவருக்கு கைவந்த கலை. சொன்னபடி செய்தும் விட்டார்.