தாராள ஒப்பந்த நாடுகளுடன் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு
தாராள ஒப்பந்த நாடுகளுடன் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு
ADDED : அக் 20, 2025 10:36 PM

திருப்பூர்: தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக மேம்பாட்டுக்காக, நம் நட்பு நாடுகள் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கப்படுகிறது. ஒன்பது நாடுகளுடன் ஏற்கனவே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.
சமீபத்தில், பிரிட்டனுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது; ஏற்கனவே கையெழுத்தான, நான்கு ஐரோப்பிய நாடுகளுடன் கடந்த மாத இறுதியில் இருந்து ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
முழுமையான வரிச்சலுகை கிடைப்பதால், ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் ஏப்., முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், 5,973 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
அதிகபட்சமாக, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, 3,740 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது; இது, முந்தைய ஆண்டின், இதே நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், 18 சதவீதம் அதிகம்.
ஐஸ்லாந்துக்கான ஏற்றுமதி, 87 சதவீதம் அதிகரித்துள்ளது; ஜப்பான் ஏற்றுமதி, 25 சதவீதம் அதிகரித்துள்ளது. மிக குறைவாக ஏற்றுமதி நடந்து வந்த நாடுகளுடன் பேசி, ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தாராள வர்த்தக ஒப்பந்த நாடுகளுடனான ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'குறிப்பிட்ட நாடுகளை மட்டுமே சார்ந்து இருக்காமல், அனைத்து நாடுகளிலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுடனான ஏற்றுமதியை உயர்த்த மத்திய அரசு ஊக் குவிக் கிறது' என்றனர்.

