வர்த்தக ஒப்பந்த நாடுகளுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி உயர்வு
வர்த்தக ஒப்பந்த நாடுகளுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி உயர்வு
ADDED : ஜன 27, 2025 12:50 AM

திருப்பூர்:வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி, நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், 10,370 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின், இதே எட்டு மாதங்களில், 9,477 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்தது;
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில், இரு நாடுகள் இடையே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. இந்தியா, ஒன்பது நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தகம் செய்ய பேச்சு நடந்து வருகிறது.
இந்த எட்டு நாடுகளுடன், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத கால வர்த்தகம் 9.40 சதவீதம் அதிகரித்துள்ளது. வர்த்தக ஒப்பந்த நாடுகளில் அதிகபட்சமாக, ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி நடக்கிறது. கடந்த நிதியாண்டின் எட்டு மாதங்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 5,838 கோடி ரூபாயாக இருந்தது; இந்த நிதியாண்டில் அது, 6,363 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு, 2,116 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாகியுள்ளன.
ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்துக்கான வர்த்தகம் இயல்பு நிலையில் உள்ளது. ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, மொரீசியஸ், நார்வே ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது என, பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் தெரிவித்தனர்.