குப்பை கிடங்கிற்கு இடம் தனியார் தந்தால் விலைக்கு வாங்க தயார்: அமைச்சர் நேரு
குப்பை கிடங்கிற்கு இடம் தனியார் தந்தால் விலைக்கு வாங்க தயார்: அமைச்சர் நேரு
ADDED : மார் 20, 2025 12:46 AM
சென்னை:''நகரங்களில் குப்பை கிடங்கிற்கு இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. குறைந்த விலைக்கு தனியார் இடம் அளிக்க முன்வந்தால், வாங்க தயாராக உள்ளோம்,'' என, அமைச்சர் நேரு தெரிவித்தார்.
சட்டசபையில், தி.மு.க., - ராமகிருஷ்ணன், குப்பைகளிலிருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு, ''குப்பையை மக்க வைக்கும் இடம், நம் மாநிலத்தில் போதுமானதாக இல்லை. இடமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு நகரங்களில், குப்பை தீராத பிரச்னையாக உள்ளது. 'பயோமைனிங்' முறையில், பெரிய குப்பை மேடுகளை பிரித்து அகற்றி உள்ளோம்.
''பல நகரங்களில் கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்க, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, ஓரமான இடம் பார்த்து அமைக்க வேண்டி உள்ளது.
''தனியாரிடம் இடம் இருந்தால், விலைக்கு வாங்கவும் தயாராக உள்ளோம். எல்லா இடத்திலும் இடம் பிரச்னை உள்ளது.
தற்போதுதான் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, சென்னையில் துவக்க உள்ளோம். அடுத்து கோவை, மதுரை போன்ற பகுதிகளில் துவக்கப்படும்,'' என்றார்.