ADDED : பிப் 10, 2024 12:17 AM
கோவை:''முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தை பற்றி, அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர் தவறாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்து, பொது செயலர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்தால், நானும் வருத்தம் தெரிவித்து, பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்,'' என தி.மு.க., - எம்.பி., ராஜா சவால் விட்டுள்ளார்.
அ.தி.மு.க., நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர்., பற்றி, தி.மு.க., - எம்.பி., ராஜா அவதுாறாக பேசியதை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், அ.தி.மு.க.,வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்பிரச்னை தொடர்பாக, கோவையில் எம்.பி., ராஜாவிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளித்ததாவது:
எனக்கு என்னென்ன தகுதியிருக்கிறது என்று சொல்வதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை. நான் அந்த வார்த்தை பயன்படுத்தியதற்கு பதிலாக, வேறு வார்த்தை பயன்படுத்தி இருக்கலாம் என கூறினால், அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர், முதல்வரை, கருணாநிதியை, முதல்வர் குடும்பத்தினரை பற்றி பேசியது தொடர்பாக, ஐகோர்ட்டில் இரண்டு வழக்கு இருக்கிறது.
அதன்பின் நடந்த மாநாட்டில், கலை நிகழ்ச்சி என்ற பெயரில், முதல்வரின் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள். இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து, பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் வருத்தம் தெரிவித்து, தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு, எம்.பி., ராஜா கூறினார்.
'எம்.ஜி.ஆர்., முகத்தை வைத்து தான் தி.மு.க., ஆட்சிக்கே வந்தது என, பழனிசாமி கூறியிருக்கிறாரே' என, நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ''அது தனிக்கதை. அதைப்பற்றி தனியாக பேசுவோம்,'' என்றார் ராஜா.