பழனிசாமியை கிளாம்பாக்கம் அழைத்து செல்ல ரெடி: சிவசங்கர்
பழனிசாமியை கிளாம்பாக்கம் அழைத்து செல்ல ரெடி: சிவசங்கர்
ADDED : பிப் 13, 2024 07:17 AM
சென்னை : ''எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விரும்பினால், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்குள்ள வசதிகளை காண்பிக்க தயார்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், நேற்று அளித்த பேட்டி:
பழனிசாமி பேட்டி கொடுத்தபோது, தி.மு.க., ஆட்சி வந்த பின் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை; பழைய பஸ்களை தான் இயக்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அவருக்கு நான் தெரிவித்துக் கொள்வது, புதிய பஸ்களை வாங்கப்பட்ட காரணத்தால் தான், ஜன., 20ல் முதல்வர் 100 புதிய பஸ்களை இயக்கி வைத்தார்.
அதன்பின், 91 பஸ்கள் ஓட்டத்திற்கு வந்திருக்கின்றன. எனவே, 191 பஸ்கள் ஓட்டத்திற்கு வந்திருக்கின்றன. கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய பஸ் நிலையம் குறித்து மீண்டும், மீண்டும் பழனிசாமி குற்றச்சாட்டு சொல்லி வருகிறார். ஆசியாவின் மிகச்சிறந்த பஸ் முனையமாக அந்த பஸ் நிலையம் அமைந்திருக்கிறது.
அவருக்கு அதில் சந்தேகம் இருந்து, வருவதற்கு நேரம் இருந்தால், நானும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பொறுப்பு வகிக்கும் துறையான சி.எம்.டி.ஏ.,வுக்கும் அமைச்சராக இருக்கும் சேகர் பாபுவும், அவரை நேராக அழைத்துக் கொண்டு போய் பஸ் நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை நேரடியாகவே காண்பிக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.