தனியார் வல்லுனர்களை பயன்படுத்த ரியல் எஸ்டேட் ஆணையம் தயக்கம் கட்டுமான திட்ட ஆவண சரிபார்ப்பு தாமதம்
தனியார் வல்லுனர்களை பயன்படுத்த ரியல் எஸ்டேட் ஆணையம் தயக்கம் கட்டுமான திட்ட ஆவண சரிபார்ப்பு தாமதம்
UPDATED : அக் 18, 2026 05:29 PM
ADDED : அக் 18, 2026 05:26 PM
சென்னை: அடுக்கு மாடி குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்யும் போது, அது தொடர்பான ஆவணங்களை, தனியார் வல்லுனர்கள் வாயிலாக சரிபார்ப்பதற்கு, ரியல் எஸ்டேட் ஆணையம் தயங்குவதாக கட்டுமான துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 5,381 சதுரடிக்கு மேற்பட்ட கட்டுமான திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம். ஆரம்பத்தில் இதற்கான பணிகள், அலுவலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது, ‘ஆன்லைன்’ முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன.
இதில், கட்டுமான நிறுவனங்களின் விண்ணப்பங்கள், ஆவணங்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்வதில் அதிக தாமதம் ஏற்படுகிறது. இதனால், பதிவு தாமதமாவதுடன் வீடு விற்பனையும் பாதிக்கப்படுகிறது என, புகார் கூறப்படுகிறது. எனவே, கட்டுமான திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பதிவை விரைவுபடுத்த வேண்டும் என, கட்டமான துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சிலின், தமிழக பிரிவு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஆணையத்தில், விண்ணப்பங்கள் தொடர்பான பதிவு மேற்கொள்ள, கூடுதல் விபரங்கள் கேட்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து புகார் தெரிவித்த போது, ஒரு விண்ணப்பத்துக்கு இரண்டு முறை மட்டுமே கூடுதல் விபரம், விளக்கம் கேட்கப்படும் என, ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், கட்டுமான திட்டங்கள் குறித்த ஆவணங்களை, தனியார் வல்லுனர்கள் வாயிலாக சரிபார்த்து, சான்றளிக்கும் நடைமுறை உள்ளது. அரசு பதிவு பெற்ற வல்லுனர்கள் வாயிலாக சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டால், ஆணையம் இறுதி முடிவை மட்டும் எடுக்கலாம்.
இதனால், பதிவு தொடர்பான பரிசீலனை பணிகள் விரைவாக முடியும். தமிழகத்தில் இந்த முறையை அமல்படுத்த வலியுறுத்தினோம். ஆனால், தமிழக ரியல் எஸ்டேட் ஆணையம், இதில் தயக்கம் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
