ADDED : ஆக 30, 2025 06:02 AM
சென்னை: தமிழக ரியல் எஸ்டேட் ஆணையத்தில், புகார்களை விசாரிக்கும் அமர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2017ல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இத்துடன் மேல் முறையீட்டை விசாரிப்பதற்கான தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
இதில், வீடு வாங்குவோர், பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டால், இழப்பீடு கோருதல், பணத்தை திரும்ப பெறுதல் குறித்து, அதற்கான 'N' படிவத்தில் புகார் தெரிவிக்கலாம். வீடு விற்பனையில் பொதுவான குறைபாடுகள் இருந்தால், 'M' படிவம் வாயிலாக புகார் செய்யலாம்.
வீடு ஒப்படைப்பதில் தாமதம் என வரும் புகார்களை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நிலையில் உள்ள விசாரணை அலுவலர் விசாரித்து, உத்தரவுகள் பிறப்பித்து வந்தார்.
இதில் ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதால், பணத்தை திரும்ப வழங்குவது குறித்து, ஒரு நபர் அமர்வு விசாரிக்கும் என, ஆணையம், 2022ல் அறிவித்தது.
இதன் அடிப்படையில் ஒரு நபர் அமர்வு செயல் பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ஒரு நபர் அமர்வுக்கு பதிலாக, பிரதான அமர்வு இரண்டாக பிரித்து அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா, உறுப்பினர்கள் எல். சுப்ரமணியன், சுகுமார் சிட்டிபாபு ஆகியோர், முதல் அமர்வில் இடம் பெற்றுள்ளனர்.
உறுப்பினர்கள் எம். கிருஷ்ணமூர்த்தி, டி. ஜெகந்நாதன் ஆகியோர், இரண்டாவது அமர்வில் இடம் பெற்றுள்ளனர். முதல் அமர்வு, திங்கள், புதன் கிழமைகளில் புகார்களை விசாரிக்கும்.
இரண்டாவது அமர்வு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புகார்களை விசாரிக்கும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது.