மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க காரணம்: அமைச்சர் விளக்கம்
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க காரணம்: அமைச்சர் விளக்கம்
UPDATED : பிப் 23, 2024 03:12 AM
ADDED : பிப் 23, 2024 02:16 AM

சென்னை: ''சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பை மேம்படுத்தவே, தமிழக மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்கப்படுகிறது,'' என, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை போல, தமிழக மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தை உருவாக்கும் மசோதா மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
பா.ம.க., - ஜி.கே.மணி: தமிழக நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்படும் சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுமா; அவ்வாறு அமைத்தால், எவ்வளவு கி.மீ., அவை அமைக்கப்படும்?
அமைச்சர் வேலு: சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக, தமிழக மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படுகிறது. மத்திய அரசு, ஏழு மீட்டர், 10 மீட்டர், ஒன்றரை மீட்டர் என, சாலைகளை விரிவாக்கம் செய்து, சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது.
தமிழகத்தில் வாகனங்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை பார்க்கும்போது, 10 ஆண்டுக்கான பட்ஜெட் நிதியை ஒதுக்கினால் கூட, தேவைகள் அதிகமாக இருக்கின்றன. மாநில அரசால் ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே தான், தமிழக மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரியையும், துறையில் உள்ள மூத்த பொறியாளர்களையும் அலுவலர்களாக நியமிக்க உள்ளோம். மாநில அரசின் நிதியை, இந்த திட்டத்திற்கு பயன்படுத்த இருக்கிறோம்.
உலக வங்கி, ஜப்பான் வங்கிகளில் இருந்து நிதி பெறுவது தாமதமாகிறது. இந்த ஆணையத்தால் பணிகள் தனியாக நடக்கும். மக்கள் தேவை அறிந்து திட்டங்கள் நிறைவேற்றப்படும். சுங்கச்சாவடி அமைப்பது குறித்து, இப்போது உறுதி செய்ய முடியாது.
நிதித்துறை வாயிலாக சட்ட திட்டங்களை உருவாக்கி, அதன்பின்னர், 60 கி.மீட்டருக்குள் சுங்கச்சாவடி வருமா; 50 கி.மீ.,க்குள் சுங்கச்சாவடி வருமா என்பது முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதையடுத்து, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.