மின் வாரியத்திற்கு ரூ.80,000 கோடி இதுவரை ஆர்.இ.சி., நிறுவனம் கடன்
மின் வாரியத்திற்கு ரூ.80,000 கோடி இதுவரை ஆர்.இ.சி., நிறுவனம் கடன்
ADDED : ஜூலை 22, 2025 11:24 PM
சென்னை:மத்திய மின் துறையின் கீழ் இயங்கும் ஆர்.இ.சி., நிறுவனத்திடம் இருந்து, தமிழக மின் வாரியம், இதுவரை 80,000 கோடி ரூபாய் கடன் வாங்கிஉள்ளது.
தமிழக மின் வாரியத்துக்கு, மின் கட்டணம் மற்றும் அரசு மானியம் வாயிலாக வருவாய் கிடைக்கிறது.
வரவை விட, செலவு அதிகம் இருப்பதால், மத்திய மின் துறையின் கீழ் இயங்கும், ஆர்.இ.சி., - பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் போன்ற நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றிடம் இருந்து, மின் வாரியம் கடன் வாங்குகிறது.
ஆர்.இ.சி., நிறுவனத்திடம் இருந்து, மின் வாரியம் வாங்கிய கடனில் மேற்கொள்ளப்படும் மின் திட்டங்கள் குறித்து, ஆர்.இ.சி., அதிகாரிகள் குழு, சென்னை மின் வாரிய அலுவலகத்தில் நேற்று ஆய்வு நடத்தியது.
இது குறித்து, ஆர்.இ.சி., நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநர் நாராயணன் திருப்பதி கூறியதாவது:
நாட்டிலேயே சிறப்பான மின் வினியோக கட்டமைப்பை தமிழக மின் வாரியம் கொண்டுள்ளது.
ஆர்.இ.சி., நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளில், 80,000 கோடி ரூபாய் அளவுக்கு, மின் வாரியத்துக்கு கடனுதவி வழங்கி உள்ளது.
இந்த கடனில், நீலகிரியில் குந்தா நீரேற்று மின் நிலையம், நாமக்கல் கொல்லிமலையில் நீர் மின் நிலையம், துாத்துக்குடியில் உடன்குடி அனல் மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு மின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த மின் திட்டப் பணிகளை வேகப்படுத்துமாறு, மின் வாரிய அதிகாரிகளிடம் தெரி விக்கப்பட்டது.
மின் உற்பத்தி, பகிர்மானம், தொடரமைப்பு கழகம் ஆகியவற்றில் மேற் கொள்ளப்பட உள்ள, புதிய மின் திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி வழங்கப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.