மறுசுழற்சி ஆடைக்கான பிரத்யேக குறியீட்டுக்கு அரசிடம் பரிந்துரை
மறுசுழற்சி ஆடைக்கான பிரத்யேக குறியீட்டுக்கு அரசிடம் பரிந்துரை
ADDED : பிப் 15, 2024 02:09 AM

திருப்பூர்:'பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்ப ஆடைகளை அடையாளப்படுத்துவதற்கு, பிரத்யேக குறியீடு உருவாக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுஉள்ளது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை கண்காணிக்கவும், புள்ளிவிபரங்கள் சேகரிக்கவும் வசதியாக, மத்திய அரசு, ஒவ்வொரு பொருளுக்கும், பிரத்யேக ஏற்றுமதி குறியீடு வழங்குகிறது.
எதிர்பார்ப்பு
இதுகுறித்த விபரங்கள், மற்ற நாடுகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இயற்கை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வளர்ந்த நாடுகள், பசுமை சார் உற்பத்தி மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை வரவேற்கின்றன.
செயற்கை நுாலிழை ஆடைகள் மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்ப ஆடைகளுக்கு, இனிவரும் நாட்களில், வளர்ந்த நாடுகளில் அதிக வரவேற்பும், வர்த்தக வாய்ப்பும் கிடைக்கும்.
இந்நிலையில் இத்தகைய இயற்கை சார் உற்பத்தி ஆடைகளுக்கு, தனி ஏற்றுமதி குறியீடு வழங்க வேண்டும் என்று, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, திருப்பூர் 'நிப்ட்-டீ' கல்லுாரி அடல் இன்குபேஷன் மைய ஆலோசகர் பெரியசாமி கூறியதாவது:
வாழைநார், மூங்கில், தாமரைத் தண்டு போன்ற பல்வேறு தாவர வகைகளில் இருந்து இயற்கை நுாலிழை தயாரிப்பு; செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியும் வளர்ச்சி பெற்றுள்ளது.
அடையாளம்
அதுபோல, பயன்படுத்திய 'பெட்' பாட்டில்களில் இருந்து, பாலியஸ்டர் ஆடை தயாரிக்கப்படுகிறது. பனியன் துணி 'கட்டிங் வேஸ்ட்'டில் இருந்தும், மறுசுழற்சி முறையில் ஆடை மற்றும் ஜவுளிப் பொருட்கள் தயாராகின்றன.
இத்தகைய பசுமை சார் உற்பத்தி மற்றும் மறுசுழற்சி ஆடைகளை, பிரத்யேக ஏற்றுமதிக் குறியீடு வாயிலாக அடையாளப்படுத்த வேண்டும். இதனால் வர்த்தகம் பல மடங்கு உயருமென, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

