ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் தேவை
ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் தேவை
ADDED : நவ 20, 2025 08:36 AM

மதுரை: ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த தமிழகத்தில் ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்கும் வகையில் தமிழ்நாடு ரயில்வே மேம்பாட்டுக் கழகம் அமைக்க வேண்டும். திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக விருதுநகர் செல்லும் வகையில் புறவழி ரயில்பாதை அமைக்க வேண்டும்.
திருச்செந்துார் ஸ்டேஷனில் 24 பெட்டிகள் நிறுத்தும் வகையில் 5 பிளாட்பாரங்கள் அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா, சென்னை சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் தமிழக தலைமைச் செயலர் முருகானந்தத்திடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் மேற்கண்ட கோரிக்கைகள் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாண்டியராஜா கூறியதாவது: ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே திட்டங்கள், அடிப்படை கட்டமைப்புப் பணிகள் விரைவு பெறும்.
திருச்செந்துாரில் நீண்ட பிளாட்பாரங்கள் அமைந்தால் முருக பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பெட்டிகளுடன் ரயில்களை இயக்க முடியும். தென்காசி புறவழி ரயில் பாதை அமைந்தால்திருநெல்வேலியில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். இதனால் திருநெல்வேலி ஸ்டேஷனில் நெரிசல் குறைவதோடு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். இவ்வாறு கூறினார்.

