சோலார் மின்வேலிகளை பிடுங்கி வீசி தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள் 3 ஏக்கர் பயிர்கள் பாழ், தென்னை, வாழைகளும் சாய்ப்பு
சோலார் மின்வேலிகளை பிடுங்கி வீசி தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள் 3 ஏக்கர் பயிர்கள் பாழ், தென்னை, வாழைகளும் சாய்ப்பு
ADDED : நவ 20, 2025 02:52 AM

திண்டுக்கல்: கன்னிவாடி கருப்பசேர்வைகாரன்பட்டியில் சோலார் மின்சார கம்பிகளை பிடுங்கி வீசி தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள் 3 ஏக்கரில் சோளம், தென்னை, வாழைக்கன்றுகளை நாசம் செய்தன.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கருப்பசேர்வைக்காரன்பட்டி பகுதி கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் தென்னை, வாழை ,மக்காச்சோளம் விவசாயம் செய்யப்படுகிறது. 100 ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு கீழிறங்கிய 10க்கு மேற்பட்ட காட்டுயானைகள் நடராஜன் என்பவரின் மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை முழுமையாக அழித்தது.
இதன் அருகே தோட்டத்தில் உள்ள தென்னை, வாழைக்கன்றுகளையும் சேதப்படுத்தின. நடராஜன் கூறுகையில் ''6 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தேன். பாதுகாப்புக்காக சோலார் மின்வேலி அமைத்திருந்ததேன். இரவில் வேலிகளை பிடுங்கி ஏறிந்து தோட்டத்துக்குள் புகுந்த காட்டுயானைகள் அறுவடை நேரத்தில் பயிர்களை அழித்துவிட்டன. ரூ.5 லட்சம் செலவு செய்து பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. யானைகளால் ஏற்பட்ட இழப்புக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றார்.

