மயிலத்தில் வரலாறு காணாத மழை... 51 செ.மீ., : விழுப்புரம், புதுச்சேரியில் ராணுவம், ஏரி உடைந்ததால் மிதக்கும் திண்டிவனம்
மயிலத்தில் வரலாறு காணாத மழை... 51 செ.மீ., : விழுப்புரம், புதுச்சேரியில் ராணுவம், ஏரி உடைந்ததால் மிதக்கும் திண்டிவனம்
UPDATED : டிச 02, 2024 10:24 AM
ADDED : டிச 01, 2024 11:50 PM

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'பெஞ்சல்' புயல், புதுச்சேரி அருகே நேற்று முழுமையாக கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. திண்டிவனம் அடுத்த மயிலத்தில், வரலாறு காணாத வகையில், 51 செ.மீ., மழை பெய்தது. ஏரி உடைந்ததால், திண்டிவனம் நகரம் வெள்ளத்தில் மிதந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், மீட்புப் பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்ட நிலையில், இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் பெஞ்சல் புயல் உருவான போது, டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
புயலின் நகர்வில் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்ட நிலையில், புதுச்சேரி - மாமல்லபுரம் அருகே நேற்று முன்தினம் கரையை கடக்கும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 90 கி.மீ., வேகத்தில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்யும் என்றும், 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டது.
ஆனால், கரையை நெருங்கிய நேரத்தில் வடமேற்கு திசையில் நகராமல், மேற்கு திசை நோக்கி நகர்ந்த புயல், புதுச்சேரிக்கு மிக அருகே நேற்று முன்தினம் மாலை முதல் மெல்ல கரையை கடக்க துவங்கியது.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மழை மற்றும் சூறைக்காற்றின் பிடியில் இருந்து தப்பின.
மாறாக, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை விடாமல் மழை கொட்டி தீர்த்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி
புதுச்சேரியில் 48 செ.மீ., மழை பெய்தது. இது, 30 ஆண்டுகளில் இல்லாத மழை. இந்த மழையால், புதுச்சேரி முழுதும் வெள்ளக்காடானது; நான்கு பேர் உயிரிழந்தனர்.
மீட்புப் பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி பிரதான சாலைகளான நுாறடி சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட நகரின் பெரும்பாலான சாலை மற்றும் நகரப் பகுதிகளில், 4 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியதுடன், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
பாகூர், நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லுார், வில்லியனுார், கரையாம்புத்துார், திருக்கனுார் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில், 25,000 ஏக்கர் விளை நிலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழையில் 300 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும், நகரில் உள்ள 15 துணை மின் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், புதுச்சேரி முழுதும் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடியதாலும், நகர பகுதியில் பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. சென்னை, திருச்சி, திருவண்ணாமலை போன்ற வெளி மாவட்டங்களுக்கு மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
வெள்ளத்தில் குடியிருப்புகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக, கலெக்டர் குலோத்துங்கன் நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு சென்னை கேரிசன் பெட்டாலியன் ராணுவ பிரிவுக்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, மேஜர் சங்வான் தலைமையில், 68 பேர் இடம் பெற்ற ராணுவ படையினர் அதிகாலை, 5:30 மணி முதல், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மழை பாதிப்புகளை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
முதல்வர் ரங்கசாமி கூறுகையில், ''அதிகளவிலான மழை பெய்துள்ளது. மோட்டாரால் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை நின்றதும் ஒரு மணி நேரத்தில் நிலைமை சீராகும்,'' என்றார்.
விழுப்புரம்
பெஞ்சல் புயலால் அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் வரலாறு காணாத வகையில், 51 செ.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் கனமழையால், 11 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன; 51 மின் கம்பங்கள், 25 மரங்களும் சாய்ந்தன. புயல் பாதுகாப்பு மையங்களில், 1,285 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏழு கால்நடைகள் இறந்தன. மாவட்டத்தில், 50 இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோழிப்பண்ணைகள் மூழ்கி, 3,000 கோழிகளும் இறந்தன.
மாவட்டத்தின் முக்கிய நீர் நிலையான வீடூர் அணைக்கு, வினாடிக்கு, 36,203 கன அடி நீர்வரத்து உள்ளது. இதையடுத்து, நேற்று அதிகாலை, 3:30 மணி அளவில் அணையிலிருந்து, 36,203 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர். இதனால், சங்கராபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறியது.
விழுப்புரம் பூந்தோட்டம் ஏரியில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம், கலெக்டர் பெருந்திட்ட வளாகம் முழுதும், மழைநீர் குளம் போல தேங்கியது. சாலைகள் இருக்கும் இடமே தெரியாத அளவில் குளம் போல் தேங்கிய மழைநீர், படிப்படியாக அதிகரித்து, திருச்சி சாலையை கடந்து எதிரில் உள்ள குடியிருப்புகளுக்கு வெள்ளமாக சென்றது.
விழுப்புரம் நகரின் பிரதான சாலைகளில் வாய்க்கால் போல மழை நீர் வழிந்தோடியதால், மக்கள் அவதிப்பட்டனர். நகரில் கடைகள் முழுவதும் மூடப்பட்டதால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்தனர்.
தொடர் மழை காரணமாக, 119 அடி உயரமுடைய சாத்தனுார் அணையில், 117 அடி தண்ணீர் நிரம்பியதால், அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. மொத்த நீர் வரத்தான, 5,700 கன அடி நீரை அப்படியே திறந்து விட்டனர். இதனால், விழுப்புரம் மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
மரக்காணம் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால், பல இடங்களில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அனுமந்தையில் இருந்து வண்டிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கி, பல அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வௌியே செல்ல முடியாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளனர்.
பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மரக்காணத்தில், 5,000 ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின. உற்பத்தி செய்து வைத்திருந்த 100 டன் உப்பும், மழை நீரில் கரைந்தது. உப்பளங்களை மூழ்கடித்த வெள்ளம் இ.சி.ஆர்., சாலையில் வழிந்தேடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டிவனத்தில் அதிகபட்சமாக, 37 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால், திண்டிவனம் பழைய பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள கிடங்கல் (1) ஏரி நிரம்பி, மழை நீர் வெள்ளம் போல கரை புரண்டது. பஸ் நிலையத்தையொட்டி, கிடங்கல் பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
வெள்ள நீர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கரைபுரண்டோடியதால், பஸ் நிலையத்திற்கு செஞ்சி, வந்தவாசி, வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் உள்ளே வரமுடியாத நிலை ஏற்பட்டது. திண்டிவனம் - புதுச்சேரி சாலையிலுள்ள மரக்காணம் கூட்ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்ததால் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் அரசு டவுன் பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் மழை கொட்டியது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடானது. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர். நாச்சிப்பட்டு பகுதியில் மழை நீரால் வீட்டினுள் சிக்கிய, 15 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தண்டராம்பட்டு பகுதியில் மழை நீரால் சிக்கி தவித்த, 50க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த பள்ளியம்பட்டு கிராமத்தில், நேற்று மதியம் இடியுடன் மின்னல் அடித்தது. இதில், கிராமத்து தார்ச்சாலை பட்டாசு போல் வெடித்து, 2 அடி ஆழத்துக்கு உள்வாங்கியது. மக்கள் அதிர்ச்சி அடைந்து மழையையும் பொருட்படுத்தாமல் வீடுகளில் இருந்து வெளியே ஓடினர். சாலை உள்வாங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மாவட்டத்தில் பெய்த கனமழையால், மாவட்டம் முழுதும், 125க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கலசப்பாக்கம், போளூர், ஆரணி, வேட்டவலம், கீழ்பென்னாத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருண்ணாமலை அடுத்த நொச்சிமலை ஏரி நிரம்பி நீர் வழிந்தோடி, சென்னை - திருவண்ணாமலை சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
திருவண்ணாமலை மாவட்டம், கலெக்டர் அலுவலகம், கலெக்டர் பங்களா, எஸ்.பி., பங்களா, திட்ட அலுவலர் பங்களா, மாவட்ட வன அலுவலர் பங்களா என அருகருகில், வேங்கிக்கால் ஏரியை ஒட்டி, 100 அடி சாலை எதிரே கட்டப்பட்டுள்ளது. நேற்று ஏரியிலிருந்து உபரி நீர் அதிகமாக வெளியேறியதால், கலெக்டர் பங்களா சுற்றுச்சுவரை கடந்து சென்ற போது, சுற்றுச்சுவர் இடிந்து தண்ணீர் உள்ளே புகுந்தது. இதனால், கலெக்டர் பங்களா தீவு போல மாறியது.
வேலுார்
வேலுார் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில், கழிவுநீருடன் மழை நீர் வீடுகளில் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் விடிய விடிய துாக்கமின்றி தவித்தனர். வேலுாரில் அதிகபட்சமாக, 11.4 செ.மீ., மழை பதிவானது. மாவட்டத்தின் ஜவ்வாதுமலை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நடுவழியில் பஸ் சிக்கியது. 15க்கும் மேற்பட்ட பயணியரை கிராம மக்கள் மீட்டனர்.
ஒடுகத்துாரை அடுத்த ஜவ்வாதுமலை தொடர் பகுதியான மேல் அரசம்பட்டு மலை கிராம பகுதி உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. உத்திரகாவிரியாற்றின் வெள்ள நீர் பள்ளிக்கொண்டா பாலாற்றில் கலப்பதால், பாலாற்றிலும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்த கனமழையால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி ஆகியவற்றில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பலத்த காற்று வீசியதால் வனப்பகுதியில் இருந்த மரங்கள் சாய்ந்தன. கொல்லிமலையில் சோளக்காடு அருகே மூலசோலை கிராமத்தில், பாறைகள் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால், நாமக்கல்லில் இருந்து ஒத்தகடை செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா, சோளிங்கர், பனப்பாக்கம், நெமிலி, பானாவரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. பனப்பாக்கம் - பன்னியூர் இடையே தரைப்பாலம் அகற்றப்பட்டு, மேம்பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.
தற்போதைய கன மழையால், தற்காலிக சாலை முழுதும் அடித்துச் செல்லப்பட்டு, வெள்ள நீர் ஆர்ப்பரித்து ஓடுவதால், பெருவளையம், கல்பலாம்பட்டு, சிறுவளையம், ஆலப்பாக்கம், கர்னாவூர், புதப்பட்டு, பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகர் மாவட்டத்தில், நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. தொடர்ந்து பெய்த மழையால், மக்கள் வீடுகளில் முடங்கினர். ஏற்காட்டில் அதிகபட்சமாக, 144.4 மி.மீ., மழை பதிவானது. பெரம்பலுார் மாவட்ட பகுதியில் நேற்று பெய்த மழையில், 1,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிர் சாய்ந்து சேதமடைந்தன.
எங்கெங்கு பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை?
'பெஞ்சல்' புயலால்
பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து, இயல்பு நிலை திரும்பாததாலும்,
இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாலும், வேலுார், தர்மபுரி,
திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி,
கடலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும்
பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்
சென்னை, திருவள்ளூர், பெரியார், அண்ணாமலை பல்கலைகழங்களில் , இன்று நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும், தேதி
குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. மாற்று தேதி பின்னர்
அறிவிக்கப்படும் என, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் மழை கொட்டியது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடானது. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர். நாச்சிப்பட்டு
பகுதியில் மழை நீரால் வீட்டினுள் சிக்கிய, 15 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
தண்டராம்பட்டு பகுதியில் மழை நீரால் சிக்கி தவித்த, 50க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த பள்ளியம்பட்டு கிராமத்தில், நேற்று மதியம் இடியுடன் மின்னல் அடித்தது. இதில், கிராமத்து தார்ச்சாலை பட்டாசு போல் வெடித்து, 2 அடி ஆழத்துக்கு உள்வாங்கியது. மக்கள் அதிர்ச்சி அடைந்து மழையையும் பொருட்படுத்தாமல் வீடுகளில் இருந்து வெளியே ஓடினர். சாலை உள்வாங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மாவட்டத்தில் பெய்த கனமழையால், மாவட்டம் முழுதும், 125க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கலசப்பாக்கம், போளூர், ஆரணி, வேட்டவலம், கீழ்பென்னாத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருண்ணாமலை அடுத்த நொச்சிமலை ஏரி நிரம்பி நீர் வழிந்தோடி, சென்னை - திருவண்ணாமலை சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
திருவண்ணாமலை மாவட்டம், கலெக்டர் அலுவலகம், கலெக்டர் பங்களா, எஸ்.பி., பங்களா, திட்ட அலுவலர் பங்களா, மாவட்ட வன அலுவலர் பங்களா என அருகருகில், வேங்கிக்கால் ஏரியை ஒட்டி, 100 அடி சாலை எதிரே கட்டப்பட்டுள்ளது. நேற்று ஏரியிலிருந்து உபரி நீர் அதிகமாக வெளியேறியதால், கலெக்டர் பங்களா சுற்றுச்சுவரை கடந்து சென்ற போது, சுற்றுச்சுவர் இடிந்து தண்ணீர் உள்ளே புகுந்தது. இதனால், கலெக்டர் பங்களா தீவு போல மாறியது.