பிராந்திய அளவில் பணி நியமன தேர்வு: எஸ்.ஆர்.எம்.யு., வலியுறுத்தல்
பிராந்திய அளவில் பணி நியமன தேர்வு: எஸ்.ஆர்.எம்.யு., வலியுறுத்தல்
ADDED : பிப் 16, 2024 11:23 PM

சென்னை:ரயில்வேயில் தனியார்மயமாக்கல் கூடாது; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.ஆர்.எம்.யு., எனப்படும், தெற்கு ரயில்வே மஸ்துார் சங்கம் சார்பில், சென்னை சென்ட்ரல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின், எஸ்.ஆர்.எம்.யு., பொதுச்செயலர் கண்ணையா அளித்த பேட்டி:
முதலில் எட்டு 'வந்தே பாரத்' ரயில்களை இயக்கி வந்த ரயில்வே, தற்போது அனைத்து வழித்தடங்களிலும் இயக்க முடிவு செய்துள்ளது. இதேபோல, சரக்கு ரயில்களை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கெல்லாம் தேவையான கட்டுமான வசதிகளை ஏற்படுத்தவில்லை; ஊழியர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தவில்லை.
மத்திய அரசின் தனியார்மய கொள்கையால், ரயில்வேயில் உள்ள 13.5 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவர். வடமேற்கு ரயில்வேயில் 56 ரயில்களும், தெற்கு ரயில்வேயில் ஆறு ரயில்களும், 'பாரத் கவுரவ்' ரயில்கள் என, சிறப்பு ரயில்களாக அறிவித்து இயக்கப்பட்டு வரப்படுகின்றன.
ஆரம்பத்தில் சிறப்பு ரயில்கள் என்று கூறி இயக்கி வந்தாலும், மக்கள் அதனுடைய சிறப்பு கட்டணத்துக்கு பழகிய பின், அவற்றை முற்றிலுமாக தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்படுகிறது. பிற மாநிலங்களில் இருந்து வந்து, ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
பிராந்திய மொழி தெரியாதவர்களை பணியில் அமர்த்துவது, மக்களுக்கு இடைஞ்சலாக உள்ளது. எனவே, முன் இருந்தது போல ரயில்வே தேர்வு வாரியம் வாயிலாக, பிராந்திய அளவிலான பணி நியமனத்துக்கு தேர்வு நடத்த வேண்டும்.
இதன் வாயிலாக, அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.