கோவை மாவட்டத்துக்கு 'ரெட் அலர்ட்': எதையும் சந்திக்க மாநில பேரிடர் மீட்பு குழு தயார்
கோவை மாவட்டத்துக்கு 'ரெட் அலர்ட்': எதையும் சந்திக்க மாநில பேரிடர் மீட்பு குழு தயார்
ADDED : மே 25, 2025 04:33 AM

கோவை: கோவை மாவட்டத்துக்கு, 'ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளதால், திருச்சியில் இருந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, தமிழக பேரிடர் மேலாண்மை குழு அறிவித்துள்ளது.
அதில், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் அதிக கனமழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில், 6.5 செ.மீ., முதல், 11.55 செ.மீ., வரை, மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால், திருச்சியில் இருந்து கோவைக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் ஏற்பட்டால், மீட்பு பணிகளில் ஈடுபட அதிநவீன கருவிகளுடன் தயாராக உள்ளனர். எவ்வித சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் மறு உத்தரவு வரும் வரை பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை எஸ்.ஐ., ஜான் ஜெயசிங் கூறியதாவது:
கோவையில் மீட்பு பணியில் ஈடுபட, திருச்சியில் இருந்து, 80 பேர் வந்துள்ளோம். கட்டடம் இடிதல், வெள்ளத்தில் சிக்குதல், மரம் விழுதல், நிலச்சரிவு உள்ளிட்ட அனைத்து விதமான பேரிடர் காலங்களிலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள பயிற்சி பெற்றுள்ளனர்.
மரஅறுவை இயந்திரம், கட்டட இடிபாடுகளை அகற்றுவதற்கான டிரில்லர்கள், வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான மோட்டார்கள், 'லைப் ஜாக்கெட்', கயிறு, கான்கிரீட் கட்டர்கள், கம்பிகளை வெட்டும் இயந்திரங்கள், மர அறுவை இயந்திரங்கள், படகுகள், ஜெனரேட்டர்கள், அஸ்கா லைட் மெகாபோன் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் உள்ளன.
எந்தவொரு சூழலையும் சமாளிக்க முடியும். கோவை மாவட்டத்தில் கட்டட இடிபாடுகள், மரம் முறிந்து விழுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். இரண்டு நாட்கள் 'ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.