UPDATED : ஜூன் 14, 2025 06:32 AM
ADDED : ஜூன் 14, 2025 06:25 AM

சென்னை: 'நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் நெற்குன்றத்தில், 17 செ.மீ., மழை பெய்துஉள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, மணலி புதுநகரில், 14; மணலியில், 12; கொரட்டூரில், 11; ராணிப்பேட்டை மாவட்டம் அரக் கோணத்தில், 10; திருவள் ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை, சென்னை மாவட்டம் வளசரவாக்கம் ஆகிய இடங்களில் தலா, 9; திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, கும்மிடிப்பூண்டி, சென்னை மாவட்டம் அயப்பாக்கம், பெரம்பூர், அம்பத்துார் ஆகிய இடங்களில் தலா, 8 செ.மீ., மழை பெய்துள்ளது.
வடக்கு கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும், 20 செ.மீ.,க்கு மேல், அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதற்காக அந்த மாவட்டத்துக்கு 'ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்றும் நாளையும் மிக கனமழை, அதாவது, 11 செ.மீ.,க்கு மேல் பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே, அப்பகுதிக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும், மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வரையிலான வேகத்திலும், இடையிடையே, 65 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.