ADDED : ஜன 26, 2025 08:44 AM
சென்னை : விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் ராஜகோபால், 19. சைதாப்பேட்டை அரசு மாணவர்கள் விடுதியில் தங்கி, நந்தனம் கலைக் கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாமாண்டு படித்தார். பகுதி நேரமாக 'கேட்டரிங்' பணி செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடிந்து, 'கேட்டரிங்' பணிக்காக, கோடம்பாக்கம் நோக்கி ரயிலில் சென்றார்.
கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சென்றபோது, காதில் மாட்டியிருந்த, 'ப்ளூடூத் ஹெட்செட்' கீழே விழுந்துள்ளது. கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கிய ராஜகோபால், ப்ளூடூத் ஹெட்செட் விழுந்த தண்டவாளம் பகுதிக்கு சென்று தேடினார்.
அப்போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த மாம்பலம் ரயில்வே போலீசார், உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

