ADDED : பிப் 20, 2025 12:58 AM
சென்னை:சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் உட்பட, ஏழு விரைவு ரயில்களில், பொது பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது.
ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, பயணியர் கூட்டம் அதிகம் உள்ள வழித்தடங்களில் செல்லும் விரைவு ரயில்களில், கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஏழு விரைவு ரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கையை குறைக்க, தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில், ஈரோடு - சென்ட்ரல், சென்னை - ஹைதராபாத் விரைவு ரயில்களில் தற்போதுள்ள நான்கு பொது பெட்டிகள் மூன்றாகவும், சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம், சென்னை - மைசூரு விரைவு ரயில் உட்பட நான்கு ரயில்களில், தற்போதுள்ள நான்கு பொது பெட்டிகள் இரண்டாகவும் குறைக்கப்பட உள்ளன. நாளை முதல் மார்ச் இரண்டாவது வாரம் வரை, இந்த பெட்டிகள் குறைப்பு அமலில் இருக்கும்.
குறைக்கப்பட்ட பெட்டிகளுக்கு பதிலாக, முன்பதிவு பெட்டிகளும், 'ஏசி' பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், 'இது தற்காலிகமான நடவடிக்கை தான். மீண்டும் பொது பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

