புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு கட்டட பராமரிப்பு நிதி தருவதில் சுணக்கம்
புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு கட்டட பராமரிப்பு நிதி தருவதில் சுணக்கம்
ADDED : அக் 06, 2024 11:40 PM

விருதுநகர் ; தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளின் கட்டடங்களுக்கான பராமரிப்பு நிதியை வழங்குவதில் பொதுப்பணித்துறை சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள் 2022 ஜன., 12ல் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆனால் செயல்பாட்டிற்கு வந்த ஓராண்டிலேயே பல மருத்துவமனை சுவர்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுதல், வெள்ளை நிற சுவர்கள் நீர் கசிவால் பச்சை நிறத்தில் பாசி படர்ந்த நிலையில் மாறியுள்ளது.
தண்ணீர் குழாய் கசிவால் நீருற்று, சுவர்களில் ஆங்காங்கே விரிசலும் ஏற்பட்டுள்ளது. கழிவறைகளில் தண்ணீர் குழாய் திறப்பான்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பிரச்னைகளை சரிசெய்யும் பணிகள் நடந்தாலும் பெயரளவிலும், கண் துடைப்பிற்காகவும் மட்டுமே நடக்கின்றன. கட்டடங்களை பராமரிக்க தேவையான நிதி கேட்டு மருத்துவமனை நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தாலும் பொதுப்பணித்துறை நிதியை தருவதில் சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே பராமரிப்பு பணிகளுக்கான நிதியை பொதுப்பணித்துறை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.