பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு: -குறைந்தது மின்உற்பத்தி
பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு: -குறைந்தது மின்உற்பத்தி
ADDED : பிப் 23, 2024 02:47 AM
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 800 கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்த அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது. நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதை தொடர்ந்து நீர் திறப்பை குறைக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 6:00 மணியிலிருந்து தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு வினாடிக்கு 800 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 125.70 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணை நீர்ப் பிடிப்பில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை இல்லாததால் நீர் வரத்து இல்லை. நீர் இருப்பு 3769 மில்லியன் கன அடியாகும்.
நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 135 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 72 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது.