ADDED : பிப் 23, 2024 02:01 AM
சென்னை: மோசடி வழக்கில் கைதான ஹிஜாவு நிதி நிறுவன இயக்குனர் சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாக கூறி, 4,400 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் பெற்று, மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, நிறுவன இயக்குனர் சவுந்தரராஜன் உட்பட, 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இந்நிலையில், ஜாமின் கோரி, 'டான்பிட்' என்ற சிறப்பு நீதிமன்றத்தில், சவுந்தரராஜன் மனு தாக்கல் செய்தார். மனு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.தனசேகரன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.பாபு ஆகியோர் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதை ஏற்ற நீதிபதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.