ADDED : டிச 24, 2024 07:01 AM
தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் அறிக்கை:
டில்லியில் அடுத்த மாதம் நடக்கும் குடியரசு தின விழாவில், தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அன்றாடம் நடக்கும் அரசு நிகழ்வுகளை அரசியலாக்கி, அதிலே ஆதாயம் காண துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த, 2022ல் டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில், தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு, மத்திய அரசு அனுமதி மறுத்தது. பின், 2023, 2024ம் ஆண்டுகளில், தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
குடியரசு தின அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில், அனைத்து மாநிலங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்பதற்காக, இந்தியாவில் உள்ள மாநிலங்கள், ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்திற்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வாய்ப்பு அளித்தால், மூன்றாம் ஆண்டு வாய்ப்பு வழங்க இயலாது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும், அந்தந்த மாநிலங்கள் சார்பில் வழங்கப்படும் சிறந்த கருப்பொருள்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளை, அணிவகுப்பு நிறைவடைந்த பின், பொது மக்கள் பார்வைக்கு நிறுத்திக் கொள்ளலாம் என்றும், மத்திய அரசு கூறியுள்ளது.
இதுபோன்ற அரசின் நடைமுறைகளை, முதல்வராக இருந்த பழனிசாமி மறந்து விட்டு, யாரோ எழுதி தருகிற தகவல்கள் அடிப்படையில், தவறான அறிக்கை வெளியிட்டுள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில், 2012, 2013, 2015, 2018ம் ஆண்டுகளில், அலங்கார ஊர்திகள் பங்கேற்கவில்லை என்ற விபரமே அவருக்கு தெரியவில்லை.
அன்றைய கால கட்டங்களில், மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள விதிமுறைகள் எதுவும் இல்லை. இனிவரும் காலங்களில், நல்ல திட்டங்களை செயல்படுத்தும் முதல்வரையும், அவரது ஆட்சியையும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குறை கூறுவதை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்.
இரண்டு ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் ஊர்திகள் தொடர்ந்து இடம் பெற்றால், மூன்றாவது ஆண்டில் அனுமதிக்கப்படாது என்ற ஒரு நடைமுறையை, மத்திய அரசின் ஆணை தெரிவித்துள்ளது. அந்த நடைமுறையை மத்திய அரசு ஒரே சீராக பின்பற்றாமல், உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு, மூன்றாவது முறை அனுமதித்து விட்டு, தமிழகத்திற்கு மட்டும் அனுமதி மறுப்பு நியாயமும், நேர்மையும் அற்ற பாரபட்சமான செயல்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.