ADDED : மார் 10, 2024 11:33 PM
திருநெல்வேலி : சங்கரன்கோவிலில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இறந்த வேன் டிரைவர் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. நேற்றும் கிராமத்தில் போராட்டம் தொடர்ந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குபுதூரை சேர்ந்தவர் முருகன் 37. வேன் டிரைவர். மார்ச் 8 மாலையில் சங்கரன்கோவில் அருகே வேன் ஓட்டிச் சென்ற போது விபத்துக்குள்ளானது.
அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் டிரைவர் முருகன் இறந்தார். அவரது இறப்பிற்கு போலீசார் தான் காரணம் என கூறி வடக்குபுதூர் கிராமத்தினர் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு அரசு வேலை, நிவாரணத் தொகை, போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரின் உடலைப் பெற உறவினர்கள் மறுத்துவிட்டனர். நேற்றும் வடக்கு புதூரில் கருப்பு கொடிகள் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

