செந்தில் பாலாஜி எதிரான வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு
செந்தில் பாலாஜி எதிரான வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு
ADDED : மார் 14, 2024 12:44 AM
சென்னை:முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜிக்கு எதிரான, அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக, பணம் பெற்று மோசடி செய்ததாக, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழும் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதில், கடந்த ஆண்டு ஜூனில் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை வழக்கை, மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்கும்படி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையில், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில், விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ்ஆஜராகினர்.
செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ''மோசடி வழக்கின் விசாரணையை, முதலில் சிறப்பு நீதிமன்றம் நடத்தி முடிக்க வேண்டும். அதுவரை, அமலாக்கத்துறை வழக்கை விசாரிக்க, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றனர்.
விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், அனைத்து தரப்பினரின் விளக்கத்தையும் கேட்க வேண்டும் என்பதால், அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஏப்ரல் 25க்கு தள்ளி வைத்தனர்.

