திசு உருவாக்கத்திற்கு பலன் தரும் மீள் உருவாக்க மருத்துவம்: அமைச்சர்
திசு உருவாக்கத்திற்கு பலன் தரும் மீள் உருவாக்க மருத்துவம்: அமைச்சர்
ADDED : ஆக 01, 2025 09:42 PM
சென்னை:மூட்டு தேய்மானம், முடக்குவாதம், எலும்பு முறிவு, சதை இழப்பு சிகிச்சைக்கான, சர்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு, சென்னையில் துவங்கியது.
சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், சர்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு நேற்று துவங்கியது. மூன்று நாள் மாநாட்டை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசியதாவது:
பல நோய்கள் மற்றும் விபத்து காயங்களால் பாதிப்படைந்த திசுக்களை, மீண்டும் உருவாக்கும் நவீன மருத்துவ சிகிச்சை முறை தான் மீள் உருவாக்க மருத்துவம்.
இந்த புதிய சிகிச்சை முறையை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில், முதல் சர்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு, 2024ல் நடந்தது.
இரண்டாவது மாநாடு, மயக்கவியல் மற்றும் வலி நிவாரண துறை சார்பாக இப்போது நடக்கிறது. நோயாளிகளின் ரத்தம், எலும்பு மஜ்ஜை, கொழுப்பு போன்றவற்றில் இருந்து, 'ஸ்டெம் செல்'களை எடுத்து, அவர்களுக்கு தேவையான பகுதிகளில், 'ஸ்கேன்' கருவி உதவியுடன், ஊசி வாயிலாக துல்லியமாக செலுத்தி, திசுக்களை மீண்டும் உருவாக்கும் சிகிச்சை முறைகள், இம்மாநாட்டில் அறுவை அரங்கிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
துபாய், அமெரிக்கா, இத்தாலி போன்ற சர்வதேச நாடுகள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள, 30 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மற்றும் 500 மருத்துவர்கள், மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்த மீள் உருவாக்க மருத்துவ முறை, வளர்ந்த நாடுகளில் மிக அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.
இந்த சிகிச்சை முறையால் மூட்டு தேய்மானம், முடக்குவாதம், எலும்பு முறிவுகள், சதை இழப்பு மற்றும் பலவிதமான விளையாட்டு காயங்கள் போன்றவற்றிற்கு மிகப்பெரிய பலன் கிடைத்திருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.