1,500 ஏக்கர் அரசு நில குத்தகையை ரத்து செய்ய பதிவுத்துறை 'நோட்டீஸ்
1,500 ஏக்கர் அரசு நில குத்தகையை ரத்து செய்ய பதிவுத்துறை 'நோட்டீஸ்
ADDED : ஏப் 07, 2025 12:04 AM

சென்னை: முறையாக முத்திரை தீர்வை செலுத்தாததால், ஒன்பது ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள, 1,500 ஏக்கர் அரசு நிலத்திற்கான, குத்தகை ஆவணங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை பதிவுத்துறை துவக்கி உள்ளது.
தமிழகத்தில், அரசு புறம்போக்கு நிலங்கள், பல்வேறு காரணங்கள் அடிப்படையில், தனியாருக்கு குத்தகைக்கு விடப்படுகின்றன. இவ்வாறு நிலங்களை குத்தகைக்கு பெறும் நிறுவனங்கள், அது தொடர்பான ஆவணங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும்.
குத்தகை ஆவணங்களை பதிவு செய்யும் போது, அதற்கான முத்திரை தீர்வையை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான சான்றுகளையும் அளிக்க வேண்டும்.
இந்த வகையில், சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில், 'செயில் ரீபேக்டரி' என்ற நிறுவனத்துக்கு, தமிழக அரசு சார்பில், 1,500 ஏக்கர் புறம்போக்கு நிலம், குத்தகைக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலத்தை பெற்ற நிறுவனம், அதற்கான ஆவணத்தை பதிவு செய்ய, சேலம் மாவட்டம் சூரமங்கலம் சார் - பதிவாளர் அலுவலகத்தை, 2016ல் அணுகியது.
நிலத்தின் உரிமை தொடர்பான அடிப்படை ஆவணங்கள் எதையும், அந்நிறுவனம் தாக்கல் செய்யவில்லை. இதனால், அந்த பத்திரத்தை பதிவு செய்யாமல், சார் - பதிவாளர் நிலுவையில் வைத்தார்.
இந்த பத்திரம் முறையாக பதிவாகாத நிலையில், பதிவுத்துறைக்கு, 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைப்பது முடங்கியது. இதுபோன்று நிலுவை ஆவணங்கள் வகையில், முடங்கிய வருவாயை வசூலிக்கும் பணியை, பதிவுத்துறை தற்போது முடுக்கி விட்டுள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உரிய அடிப்படை ஆவணங்கள் இல்லாததால், செயில் ரீபேக்டரி நிறுவனம் பெயரில் தாக்கலான, 1,500 ஏக்கர் நிலம் தொடர்பான குத்தகை பத்திரங்கள் நிலுவையில் வைக்கப்பட்டன.
பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தல் அடிப்படையில், உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவும், முத்திரை தீர்வையை செலுத்தவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு போதிய அவகாசம் அளிக்கப்பட்டது.
அதை அந்நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இறுதி வாய்ப்பாக, 15 நாட்கள் அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மேலும், அந்த நிறுவனம் உரிய பதில் அளிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட குத்தகை பத்திரம் ரத்து செய்யப்படும்.
இதனால், அந்த நிலத்தை தொடர்ந்து பயன்படுத்தும் உரிமையை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் இழக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.