பத்திரப்பதிவு பணிகள் 5 கட்டங்களாக பிரிப்பு வரிசை: டோக்கன் தேவையில்லை என அறிவிப்பு
பத்திரப்பதிவு பணிகள் 5 கட்டங்களாக பிரிப்பு வரிசை: டோக்கன் தேவையில்லை என அறிவிப்பு
ADDED : ஆக 22, 2026 04:39 AM

- நமது நிருபர் -
தமிழகத்தில் சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், வீடு, மனை விற்பனை பத்திரப்பதிவு செய்யும் பணிகள் ஐந்து கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால், வரிசை முறைக்கான 'டோக்கன்' பெற வேண்டிய தேவை இல்லை என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பதிவுத்துறையில், 'ஸ்டார் 3.0' மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மனைப்பிரிவுகளில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்டம் ஆக., 17ல் தொடங்கப்பட்டது. புதிய வீடு மனை விற்பனை பத்திரங்கள், எம்.ஓ.டி., எனப்படும் வீட்டுக் கடனுக்கான ஆவணம் ஒப்படைப்பு அடமான பத்திரம், கடன் முடிவுக்கான ரசீது ஆவணம் ஆகியவற்றை, சார் - பதிவாளர் அலுவலகம் வராமல் பதிவு செய்யலாம்.
இதற்கு தேவைப்படும் கருவிகளை, மக்கள் வீட்டில் வைத்திருக்க முடியாது என்பதால், வீடு, மனை விற்பனை செய்யும் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு சென்று, பத்திரப்பதிவு செய்யலாம்.
புதிதாக வீடு, மனை வாங்குவோர், இந்த புதிய பத்திரப்பதிவு நடைமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும். இதில், மொத்தம் ஐந்து நிலைகளில் பத்திரப்பதிவு பணிகள் நடக்கும்.
முதலில் சொத்து, அதை வாங்குவோர், விற்பவர், சாட்சிகள் குறித்த விபரங்களை பதிவேற்றம் செய்தல்; ஆதார் மற்றும் 'பயோமெட்ரிக்' விபரங்களை பதிவேற்றம் செய்தல்; 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்துதல்; பதிவுக்கு தாக்கல் செய்தல்; சார் - பதிவாளர் அதை பதிவு செய்தல் என, ஐந்து நிலைகளாக இந்த பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான புதிய வழிமுறைகள்
முதல் கட்டம்
* சொத்து வாங்குவோர், பதிவுத்துறை இணையதளத்தில் தங்கள் பெயரில், 'லாக் இன்' உருவாக்கி, பதிவு செய்ய வேண்டிய பத்திர வகையை தேர்வு செய்ய வேண்டும்
* பதிவு செய்யும் இடத்தில் விரல் ரேகை பதிவு, கருவிழி பதிவு, 'வெப் கேமரா' கருவிகளின் வகை என்ன என்பதை தேர்வு செய்ய வேண்டும்
* சொத்தின் முன் ஆவண விபரங்களை உள்ளீடு செய்து, அதன் 'டிஜிட்டல்' பிரதியை பதிவேற்றம் செய்ய வேண்டும்
* சொத்து விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் குறித்த பெயர், முகவரி, அடையாள சான்று விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்
* விற்பனை செய்யப்படும் சொத்து வீடா, மனையா என்பதை தேர்வு செய்து, அது தொடர்பான அடிப்படை விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்
* சொத்து அமைந்துள்ள சார் - பதிவாளர் அலுவலகம், கிராமம், சர்வே எண், பரப்பளவு, எல்லைகள், குறிப்புகள் போன்ற விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்
* சொத்து கைமாறும் மதிப்பு என்ன? அது எந்த வகையில் கொடுக்கப்பட்டது என்ற விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்
* அந்த சொத்து, தற்போது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை குறிப்பிட வேண்டும்
* அந்த சொத்து தொடர்பான சட்ட நிலை, வழக்கு ஏதாவது நிலுவையில் உள்ளதா என்பதை குறிப்பிட வேண்டும்
* இந்த விபரங்கள் அடிப்படையில், தானியங்கி முறையில் உருவாகும் வரைவு பத்திரம் பார்வைக்கு கிடைக்கும்
* இதன் அடிப்படையில், பத்திரத்தின் சொத்து மதிப்பு சரிபார்க்கப்பட்டு, அதற்கான பதிவு கட்டணம், முத்திரை தீர்வை, கணினி கட்டணம், ஆவண எழுத்தர் நல நிதி விபரங்கள் திரையில் தோன்றும்
* இதையடுத்து, வரைவு பத்திரம் சரி பார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்தால், இணையதளத்தில் அந்த பத்திரம், 'மை டாக்குமென்ட்ஸ்' பிரிவில் சேமிக்கப்படும்
* இதன்பின், சொத்து வாங்குவோர், விற்பவர் அடையாள சான்றுகள், மனைப்பிரிவு வரைபடம், சொத்தின் புகைப்படம் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இரண்டாம் கட்டம்
* இதை தொடர்ந்து, 'மை டாக்குமென்ட்ஸ்' பிரிவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பத்திரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்
* அடுத்து, ஆதார் சரிபார்ப்பு, விரல் ரேகை, புகைப்படம், கருவிழி ஆகிய, 'பயோமெட்ரிக்' விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மூன்றாம் கட்டம்
* முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவற்றை, 'ஆன்லைன்' முறையில் செலுத்த வேண்டும்.
நான்காம் கட்டம்
* கட்டணம் செலுத்திய பின், பத்திர பதிவுக்கு, 'ஆன்லைன்' முறையில் தாக்கலுக்கு விண்ணப்பதாரர் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். இத்துடன் விண்ணப்பதாரர் நிலையில் பணிகள் முடிந்து விடும்.
ஐந்தாம் கட்டம்
* விண்ணப்பதாரர் பதிவேற்றம் செய்த பத்திரம், இணைப்பு ஆவணங்கள், அடையாள சான்றுகளை சார் - பதிவாளர், 24 மணி நேரத்தில் சரி பார்த்து முடிவு எடுப்பார். இதன் அடிப்படையில், சார் - பதிவாளர் 'டிஜிட்டல்' கையெழுத்து போட்டு, பத்திரப்பதிவை முடித்து வைப்பார். இதன்பின், விண்ணப்பதாரர் தன், 'லாக் இன்' பிரிவை திறந்தால், அதில் பிரதி எடுப்பதற்கு ஏற்ற நிலையில் பத்திரம் தயாராக இருக்கும்.
