அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் புதிய சட்டத்தில் பதிவு துவக்கம்
அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் புதிய சட்டத்தில் பதிவு துவக்கம்
ADDED : நவ 29, 2024 11:43 PM
சென்னை:அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்தின் அடிப்படையில், வீட்டு உரிமையாளர் சங்கங்களை பதிவு செய்யும் பணிகளை, பதிவுத்துறை துவக்கி உள்ளது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உரிமைகள் தொடர்பான புதிய சட்டம், 2022ல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கான விதிகள், செப்., 24ல் வெளியிடப்பட்டன.
ஆனால், இந்த புதிய சட்டத்தின் அடிப்படையில், அடுக்குமாடி குடியிருப்போர் சங்கங்களை பதிவு செய்வதை மாவட்ட பதிவாளர்கள் தவிர்த்து வந்தனர்.
புதிய சட்டத்தை அமல்படுத்துவது குறித்த வழிகாட்டும் நடைமுறைகளை, மேலதிகாரிகள் வழங்கவில்லை என, மாவட்ட பதிவாளர்கள் காரணம் கூறினர்.
இது தொடர்பான செய்தி, நம் நாளிதழில், நவம்பர், 6ல் வெளியானது. இதன் எதிரொலியாக, புதிய சட்டத்தின்படி சங்கங்களை பதிவு செய்யும் பணிகளை, பதிவுத்துறை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டப்படி, சங்கங்களை பதிவு செய்வது தொடர்பான அதிகார அமைப்பாக, மாவட்ட பதிவாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டு உரிமையாளர் சங்கங்களை மட்டும், இந்த புதிய சட்டத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தமிழக சங்கங்கள் பதிவு சட்டத்தில் பதிவான சங்கங்களையும், இப்புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான நடைமுறைகள் குறித்து, மாவட்ட பதிவாளர்களுக்கு டிச., 3ல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.