மின்சார குறைதீர் மன்றங்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் கிடுக்கிபிடி
மின்சார குறைதீர் மன்றங்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் கிடுக்கிபிடி
ADDED : ஜன 06, 2026 11:53 PM

சென்னை: 'கடந்த, 2025 அக்., முதல் டிச., வரை, மின்சாரம் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிக்குமாறு, மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர்களுக்கு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
தமிழகம் முழுதும், வீடு உட்பட அனைத்து பிரிவு களுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியத்தின், மின் பகிர்மான கழகம் மேற்கொள்கிறது. இது, 45 மின் பகிர்மான வட்டங் களாக செயல்படுகிறது.
ஒவ்வொரு வட்டத்திலும் தலா, ஒரு மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் உள்ளது. இந்த மன்றத்தில், மின் தடை, மீட்டர் பழுது, மின்னழுத்தம் உட்பட மின்சாரம் தொடர்பான புகார்களை, மக்கள் தெரிவிக்கலாம்.
இந்த மன்றம், ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. தலைவராக, மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் உள்ளார்.
இரு உறுப்பினர்களில், ஒருவரை ஆணையமும், மற்றொரு நபரை கலெக்டரும் நியமிக்கின்றனர். அவர்களின் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள். உறுப்பினர் பதவிக் காலம் முடிந்த இரு மாதங்களுக்குள், புதிய உறுப்பினரை நியமிக்க வேண்டும்.
ஆனால், பல மன்றங்களில் உறுப்பினர்கள் இல்லை. இதை சுட்டிக்காட்டி, உறுப்பினர்களை நியமித்து, மன்ற கூட்டத்தை சரியாக நடத்த, நடவடிக்கை எடுக்குமாறு, மின் பகிர்மான கழக இயக்குநருக்கு, கடந்த அக்டோபரில், ஆணையம் கடிதம் எழுதியது.
கடந்த, 2025 அக்., முதல் டிச., வரை பெறப்பட்ட புகார், எடுக்கப்பட்ட நடவடிக்கை, உறுப்பினர் விபரம், மன்றம் மற்றும் குறைதீர்ப்பாளர் உத்தரவை செயல்படுத்த, தாமதம் ஏற்படுவதற்கான காரணம் உள்ளிட்ட விபரங்களை, குறைதீர் மன்ற இணையதள பக்கத்தில், வரும், 19ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, மன்ற தலைவர்களுக்கு, ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

