பீஹாரில் முதல்வர் வேட்பாளராக லாலு மகனை ஏற்க மறுப்பு
பீஹாரில் முதல்வர் வேட்பாளராக லாலு மகனை ஏற்க மறுப்பு
UPDATED : அக் 07, 2025 11:53 PM
ADDED : அக் 07, 2025 11:47 PM

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவை, கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்க ராகுல் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கூட்டணியில் குழப்பம் எழுந்துள்ளது. பீஹார் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவம்பர் 6, 11 ஓட்டு பதிவு தேதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆளும் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி, தேசிய அளவில் 'இண்டி' என்ற பெயரிலும், பீஹாரில் 'மகாகட்பந்தன்' என்ற பெயரிலும் செயல்படுகிறது.
தே.ஜ. கூட்டணி மீண்டும் நிதிஷ் குமாரையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது. மகாகட்பந்தன் கூடாரத்தில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை ஆகிய விஷயங்களில் முரண்பாடு நீடிக்கிறது. இப்போது, முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் மோதல் ஏற்பட்டுள்ளது.
டில்லியில் நேற்று காங்கிரஸ் நிர்வாகி உதித் ராஜ் பேட்டி அளித்தார். மகாகட்பந்தன் தரப்பில் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி தானே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு உதித் ராஜ், ''அவர் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முதல்வர் வேட்பாளராக இருக்கலாம். 'இண்டி' கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று காங்கிரஸ் முடிவெடுக்கும்'' என்றார்.
பீஹாரில் காங்கிரசை விட ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெரிய கட்சி. தமிழகத்தில் எப்படி தி.மு.க.வை சார்ந்து காங்கிரஸ் இயங்குகிறதோ, அப்படி தான் பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை காங்கிரஸ் நம்பியிருக்கிறது. முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை முன்னிறுத்தி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேர்தல் பணியை துவங்கியுள்ள நிலையில், உதித் ராஜ் இப்படி பேசியிருப்பது கூட்டணியில் புகைச்சலை கிளப்பி உள்ளது.
அடுத்த லோக்சபா தேர்தலில், இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் தான் என தேஜஸ்வி யாதவ் வெளிப்படையாக கூறி வரும் நிலையில், அவரையே முதல்வர் வேட்பாளராக ராகுல் ஏற்காதது, கூட்டணியில் பெரும் சல சலப்பை ஏற்படுத்தி உள்ளது.