UPDATED : பிப் 04, 2024 07:32 AM
ADDED : பிப் 04, 2024 02:11 AM

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், வேளாண் மற்றும் தோட்டக்கலை பிரிவில், 20 புதிய பயிர் ரகங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
ஆண்டுதோறும் விவசாயிகள் பயன்பாட்டுக்காக, வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பயிர் ரகங்கள், தொழில்நுட்பங்கள் வெளியிடப்படும். நடப்பாண்டுக்கான புதிய பயிர் ரகங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
100 ஆண்டுகள் பழமையான இப்பல்கலையில் இதுவரை, 905 புதிய பயிர்ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாகுபடி செய்ததில் இருந்து, 120 முதல் 125 நாட்களில் அறுவடை செய்துகொள்ளலாம்.
பயிர் ரகங்கள் குறித்து விளக்கமளித்த துணைவேந்தர் கீதாலட்சுமி, இதற்கான விதைகள் தயார்நிலையில் இருப்பதால், விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்தார். சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்கு, விதைகளின் மாதிரிகளை கொடுத்து கவுரவித்தார்.
நெல் கோ.ஆர்.எச்., 5
இருவழி வீரிய ஒட்டு ரகம் ஒரு எக்டருக்கு, 6467 கிலோ மகசூல் கிடைக்கும். யு.டி.எஸ்., 312 மற்றும் ஏ.டி.டீ 39 ரகங்களை 10 முதல் 18 சதவீத கூடுதல் மகசூல் இந்த புதிய ரகத்தில் எடுக்கலாம். நடுத்தர மெல்லிய சன்ன ரக அரிசி இது. புகையான், தண்டு துளைப்பான், குலை நோய் மற்றும் தானிய நிற மாற்றம் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்பு திறன் உடையது. 120-125 நாட்களில் அறுவடை செய்து கொள்ளலாம்.
நெல் கோ 58
பாசுமதி அல்லாத வாசனை கொண்ட, நீள் சன்ன ரகம் இது. பிரியாணிக்கு மிகவும் சிறந்த அரிசியாக இருக்கும்; எக்டருக்கு, 5858 கிலோ மகசூல் கிடைக்கும். பூசா பாஸ்மதியை விட, 17 சதவீதம் அதிக மகசூல் கிடைக்கும். மத்திய குட்டை, சாயாத தன்மை உடைய ரகம், துங்ரோ மற்றும் பச்சை தத்துப்பூச்சிக்கு, எதிர்ப்பு தன்மையுடையது.
மக்காச்சோளம், வி.ஜி.ஐ.எச் ( எம்) 2
இப்புதிய ரகம் மானாவாரியில் எக்டருக்கு, 6,300 கிலோ மகசூல் எடுக்கலாம். கோ.எச்.எம்., 8 மற்றும் என்.கே., 6240 ஆகியவற்றை விட, 16. 1 சதவீத மகசூல் கிடைக்கும். 81 சதவீதம் முழுதானியம் காணும் திறன் உடையது. 95-100 நாட்களில் அறுவடை செய்யலாம்.
இனிப்பு சோளம் கோ (எஸ்.எஸ்) 33
தமிழகத்தின் முதல் இனிப்பு வகை, சோள ரகம் இது என்பது பெருமைக்குரியது. தானியமாக எக்டருக்கு 2500 கிலோவும், பசுந்தீவனமாக எக்டருக்கு 42,000 கிலோவும், சாறாக எக்டருக்கு 15,133 லிட்டரும் மகசூல் எடுக்கலாம். எத்தனால் உற்பத்திக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த ரகம் உள்ளது.
எத்தனால், உற்பத்தி திறன் எக்டருக்கு, 1127 லிட்டர் என்ற அளவில் உள்ளது. தண்டு துளைப்பான் மற்றும் ஆந்த்ராக்னோஸ் நோய்க்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது. 110-115 நாட்களில் அறுவடை செய்யலாம்.
சோளம் கோ 34
இப்புதிய ரகம், தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்றது. மானாவாரி நிலத்தில் 2765 கிலோ எக்டருக்கு தானியமாகவும், உலர் தீவனமாக 9480 கிலோ எக்டருக்கும் மகசூல் கிடைக்கும். எளிதாக செரிமானம் அடையக்கூடியது.
தினை, ஏ.டி.எல் 2
எளிதில் உதிராத மணிகளை உடையது. இதில் 12.3 சதவீதம் புரதமும், 68. 4 சதவீத அரவைத்திறன் கொண்டதாக உள்ளது. தானியமாக எக்டருக்கு, 2174 கிலோ மகசூல் கிடைக்கும். அறுவடை காலம், 80-85 நாட்களாக உள்ளது
பாசிப்பயறு வி.பி.ன் 7
இப்பயிரை, ஆடிப்பட்டத்தில் எக்டருக்கு 2,527 கிலோவும், கார்த்திகை-மார்கழி பட்டத்திலும் எக்டருக்கு 2,343 கிலோவும், மகசூல் எடுக்க இயலும். நடுத்தர பருமனான விதை. அதிக எண்ணெய் சத்து மற்றும் உடைப்புத்திறன் கொண்டது.
பருத்தி வி.பி.டி., 2
குளிர்கால மானாவாரி மற்றும் நெல் தரிசில் பயிரிட ஏற்றது. சராசரியாக எக்டருக்கு 1,624 கிலோ மகசூல் எடுக்கலாம். தற்போது சந்தையில் அதிக தேவையுள்ள நீண்ட இழை பருத்தி ரகமாகும் ( 29.6 மி.மீ.,). ஒரே சமயத்தில் காய்கள் முதிர்ச்சி அடைவதால், இயந்திர அறுவடை மற்றும் அடர் நடவுக்கு ஏற்றது. 120-130 நாட்களில் அறுவடை செய்யலாம். பிற பருத்தி ரகங்கள் 5 மாதங்களில் தான் அறுவவை செய்ய இயலும்.
தக்கைப்பூண்டு டி.ஆர்.ஒய் 1
பசுந்தாள் மகசூல், எக்டருக்கு 18 டன் இருக்கும். விதைத்த, 45 நாட்களுக்கு பிறகு மடக்கி உழவேண்டும். குறைவான கார்பன் தழைச்சத்து விகிதம் கொண்டது. அதிக வேர்முடிச்சுக்களை கொண்டுள்ளது; பூச்சி நோய் தாக்குதல் குறைவு. மூன்று போகம் அரிசி விளைவிக்கும் இடங்களில், ஒரு முறை தக்கை பூண்டு பயிரிட்டு மடக்கி உழுதால், இரண்டு போகத்திலேயே மூன்று போக மகசூலை எடுத்துவிட முடியும்.
திராட்சை ஜி.ஆர்.எஸ்., ( எம்.எச்)1
கவாத்து செய்ததிலிருந்து, 120-130 நாட்களில் அறுவடை செய்யலாம். பழ மகசூல் எக்டருக்கு ஒரு ஆண்டுக்கு, 41 டன் எடுக்க இயலும். நடுத்தர பழக்கொத்துக்கள் மற்றும் பெரிய அளவிலான பழங்கள் கொண்டது. குளிர்காலத்தில் கவாத்து செய்ய வேண்டும்; மார்ச், ஏப்., மாதம் பழங்கள் கிடைக்கும். மிகவும் சுவையாக இருக்கும். 24-26 டிகிரி பிரிக்ஸ் அளவுக்கு இனிப்புத்தன்மை கொண்டது. ஒயின் தயாரிப்பதற்கும் ஏற்ற ரகம் இது.
பலா பி.கே.எம் 2
இது பல்லாண்டு பயிர் ரகம். அடர்நடவு முறைக்கு ஏற்ற உயரம் குறைவான மரங்கள். ஒரு எக்டருக்கு ஆண்டுக்கு, 175.6 டன் மகசூல் கிடைக்கும். ஒரு பழம், 11.46 கிலோ எடை கொண்டதாக இருக்கும். மார்ச்-ஜன., மற்றும் நவ.,-டிச., ஆகிய இரு பருவங்களிலும் காய்க்கும் தன்மை கொண்டது. 30.8 டிகிரி பிரிக்ஸ் அளவுக்கு இனிப்புத்தன்மை நன்றாக இருக்கும்.
வாழை காவிரி கஞ்சன்
இப்பயிர் ரகத்தில், வைட்டமின்- ஏ சத்து மிகவும் அதிகளவில் உள்ளது; ரஸ்தாளி, ஜி9 ரகங்களை காட்டிலும் வைட்டமின் ஏ சத்து இதில் 30-40 மடங்கு அதிகம் உள்ளன. ஒரு தாரின் எடை மட்டுமே 23 கிலோ வரை இருக்கும். அதிக இனிப்புச்சத்து கொண்டது. வாடல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. அறுவடை காலம், 305 முதல் 320 நாட்கள்.
கத்தரி கோ 3
எக்டருக்கு, 48.5 டன் மகசூல் எடுக்கலாம். 140-150 நாட்களில் அறுவடை செய்யலாம். ஊதா நிறத்தில், வெள்ளை கோடுகளுடன் உடைய நீளமான காய்கள். தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்திற்கு ஏற்றது.
கொத்தவரை எம்.டி.யு 2
இதை, 75 நாட்களில் அறுவடை செய்யலாம். எக்டருக்கு, 14 டன் மகசூல் கிடைக்கும். குட்டை ரகம் 7075 செ.மீ., வளரும், நீளமான காய்களை கொண்டது. செடிக்கு, 115 முதல் 125 காய்கள் கிடைக்கும்.
வெள்ளை தண்டுக்கீரை பி.எல்.ஆர் 2
இக்கீரை அறுவடை காலம், 60 நாட்கள். எக்டருக்கு 43 டன் மகசூல் கிடைக்கும். அதிக கரோட்டினாய்டு சத்து கொண்டது. வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கவும் உகந்தது.
சிவப்புக்கீரை கோ 6
எக்டருக்கு, 12.6 டன் மகசூல் கிடைக்கும். அறுவடை காலம், 30-35 நாட்களாகும்.
பல்லாண்டு முருங்கை பி.கே.எம் 3
எக்டருக்கு ஆண்டுக்கு, 68.7 டன் மகசூல் கிடைக்கும். நடுத்தர நீளமான காய்கள்.
சிவப்பு புளி பி.கே.எம் 2
ஆண்டுக்கு ஒரு மரத்திற்கு, 217 கிலோ மகசூல் எடுக்கலாம். இதுவே, முதல் சிவப்பு நிற புளி ரகம். ஜாம், ஜெல்லி போன்றவை தயாரிக்க சிறப்பாக இருக்கும்.
தென்னை விபிஎம் 6
இது ஒரு பல்லாண்டு பயிர். மரத்திற்கு ஆண்டுக்கு, 120-173 காய்கள் கிடைக்கும். அதிகளவில் (67.94சதவீத) எண்ணெய் தன்மை கொண்டது.