மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு நிம்மதி: மன்னிப்பு கோரியதால் வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு நிம்மதி: மன்னிப்பு கோரியதால் வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
ADDED : செப் 05, 2024 04:14 PM

சென்னை: தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே மன்னிப்பு கோரியதை தொடர்ந்து, அவர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
பெங்களூரு ‛ ராமேஸ்வரம் கபே' ஓட்டலில், கடந்த மார்ச்சில் குண்டுவெடித்தது. இச்சம்பவம் தொடர்பாக, தமிழகத்தில் பயிற்சி பெற்று வருவோர் கர்நாடகாவில் குண்டு வைப்பதாக, அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஷோபா பேசினார். அவரின் பேச்சுக்கு எதிராக, மதுரையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின்படி, வன்முறையை தூண்டுதல் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் மதுரை நகர போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷோபா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று முன்தினம்( செப்.,03) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில், மன்னிப்பு கோரி பிரமாண மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக , மத்தியஇணை அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறிப்பட்டு இருந்தாவது: தமிழக மக்கள் குறித்து நான் கூறிய கருத்து எவ்வித உள்நோக்கமும் கொண்டதல்ல. தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கமின்றி கூறப்பட்டது. அந்த கருத்து தமிழர்களை புண்படுத்தியதை அடுத்து, சமூக வலைதளங்களில் மன்னிப்பு கேரரினேன். தமிழர்களின் வரலாறு, கலாசாரம் மற்றும் பண்பாடு மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். என் செயல்கள் வாயிலாக, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நான் கூறிய கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஷோபா மன்னிப்பை தமிழக மக்கள் சார்பாக ஏற்றுக் கொள்வதாகவும், இந்த வழக்கை தொடர விரும்பவில்லை என தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஷோபா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.