சமஸ்கிருதத்தை எதிர்ப்பதால் தமிழ் வளர முடியாது; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
சமஸ்கிருதத்தை எதிர்ப்பதால் தமிழ் வளர முடியாது; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
ADDED : அக் 29, 2025 06:57 AM

தொண்டாமுத்தூர்: கோவை பேரூர் ஆதினம் 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், நூற்றாண்டு நிறைவு புகழரங்கம் விழா, பேரூர் ஆதின மடத்தில் உள்ள முத்தமிழரங்கத்தில் நேற்று நடந்தது. பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்து ஆசியுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, பொன்னாடை போர்த்தி, மயில் தோகை மாலை மற்றும் தலைப்பாகை அணிவித்து, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கவுரவித்தார். தொடர்ச்சியாக, 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் திருவுருவ படத்தை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து வழிபட்டார். விழா நிறைவடைந்த பின், பேரூர் திருமடத்தில் உள்ள சாந்தலிங்கர் சன்னதியில் வழிபாடு நடத்தினார்.
இவ்விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இறைவன் முன் அனைவரும் சமம். இறைவன் என்பதை உணரத்தான் முடியும். கண்ணால் பார்க்க வேண்டும் என்றால் இந்த யுகம் நமக்கு போதாது. பிரதமர் மோடி, 25 ஆண்டு காலம், முதல்வராக, பிரதமராக இருக்கிறார். நான் பல பிரதமர்களுடன் பழகியுள்ளேன். மோடி எப்போதும், திட்டங்கள் எல்லாம் முறையாக செயல்படுகின்றதா, அவ்வாறு செயல்படும் திட்டங்களின் பயன்கள் சாதாரண குடிமகன்களுக்கு எந்த அளவு சென்றடைகிறது என்பதை பார்க்கிறார்.
அதனால்தான், மகத்தான வெற்றி பெறுகிறார். சமஸ்கிருதத்தில் சொன்னால்தான் செவி கொடுத்து கேட்பாரா, தமிழில் சொன்னால் கேட்க மாட்டாரா என பலருக்கு சந்தேகம் உள்ளது.இறைவன், சமஸ்கிருதத்தில் வழிபடுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை. தமிழில் வழிபட வேண்டாம் எனவும் சொல்லவில்லை.
சமஸ்கிருதத்தை எதிர்த்துப் பேசுவதன் மூலம், தமிழ் ஒருபோதும் வளர முடியாது. தமிழ் ஒரு தீண்டத்தகாத மொழி என சொல்லி, சமஸ்கிருதம் ஒருபோதும் வளர முடியாது. இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில், பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், கே.எம்.சி.ஹெச்., தலைவர் நல்லா பழனிசாமி, ரூட்ஸ் நிறுவன இயக்குனர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

