நடிகையர் குறித்து அருவருப்பு பேச்சு காந்தராஜை கைது செய்ய தயக்கம்
நடிகையர் குறித்து அருவருப்பு பேச்சு காந்தராஜை கைது செய்ய தயக்கம்
ADDED : செப் 19, 2024 12:24 AM

சென்னை:நடிகையர் குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசிய, டாக்டர் காந்தராஜை கைது செய்யாமல், போலீசார் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலத்தை சேர்ந்தவர் காந்தராஜ். அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர், 'யு டியூப்' சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழ் நடிகையர் குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளார்.
இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் சினிமா விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துஉள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், காந்தராஜ் மீது, ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இவரை கைது செய்வதில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
நடிகையர் குறித்து காந்தராஜ் தொடர்ந்து பேசி வருகிறார். இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியதை வெளியில்கூட சொல்ல முடியாது. அந்தளவுக்கு அருவருப்பாக பேசி உள்ளார். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ராஜாராமின் சகோதரர்.
அரசியல் செல்வாக்கு காரணமாக, முன்ஜாமின் பெறும் வரை, கைது நடவடிக்கையை தவிர்க்க, விசாரணைக்கு அழைப்பது போல, காந்தராஜுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

