ADDED : ஆக 21, 2011 01:42 AM

விருதுநகர் : வானில் டைவ் அடிப்பது உள்ளிட்ட விமான சாகசம் நிகழ்ச்சிகள், என்.சி.சி .,சார்பில் விருதுநகரில் மாணவர்களுக்காக செய்து காண்பிக்கப்பட்டன.
விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழாவில் , விமான குறித்த செயல் விளக்கம் நடந்தது. இதற்கு திருச்சி என்.சி.சி .ஏர் விங்ஸ் காமாண்டிங் ஆபீசர் என். தினகரன் செயல்விளக்கம் அளித்தார்.கம்பிகளால் இயக்கக்கூடிய 4 சி.சி. இன்ஜின் திறன் கொண்ட, மெத்தனாலால் இயங்கக் கூடிய 'கண்ட்ரோல் லைன் ஏரோபேட்ரிக்ஸ்' விமானத்தை , 300 அடி உயரத்தில் 5 நிமிடம் பறக்க செய்தார். இதை தொடர்ந்து, 4 சி.சி. திறன் கொண்ட ரிமோட் கண்ட்ரோல் 'கிளைடர்' விமானமும் பறக்கவிடப்பட்டது.இது மேலே சென்ற ஒரு நிமிடத்தில் இன்ஜின் செயல்இழக்க , காற்றின் திசைக்கேற்ப 3 நிமிடம் பறந்தது. 7 சி.சி. திறன் கொண்ட ரிமோட் கண்ட்ரோல் பவர் விமானம் மூலம் டைவ் அடிப்பது, திரும்புவது உள்ளிட்ட சாகசங்களும் செய்து காண்பிக்கப்பட்டன. இது வானத்தில் 12 நிமிடம் பறந்தப்படி சாகசம் செய்தது. தலைமையாசிரியர் சந்திரமோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
என். தினகரன் கூறியதாவது: என்.சி.சி., ஏர் விங்ஸ்சில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு விமான செயல் விளக்க பயிற்சியை வழங்குறோம். விமானம் இயங்குவதை யாரும் நேரில் பார்க்க முடியாது. இதை மாணவர்கள் பார்க்கும் போது, விமான படையில் சேருவதற்கு இது ஒரு உந்துதலாக இருக்கும்,என்றார்.