யானை சின்னத்தை அகற்ற வேண்டும்: நடிகர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் நோட்டீஸ்
யானை சின்னத்தை அகற்ற வேண்டும்: நடிகர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் நோட்டீஸ்
ADDED : அக் 19, 2024 10:21 PM

சென்னை: '' தமிழக வெற்றிக் கழக கொடியில் இருந்து 5 நாட்களுக்குள் யானை சின்னத்தை அகற்ற வேண்டும்.இல்லாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கையை சந்திக்க நேரிடும்,'' என நடிகர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்ட கட்சிக் கொடியானது 2 யானைகளுக்கு நடுவில் பூ இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. கொடியில் யானை சின்னம் இருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தேசிய அளவில், அக்கட்சிக்கு யானை சின்னம் தான் ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால், இதனை விஜய் தரப்பு கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் வக்கீல் பிரிவினர், நடிகர் விஜய்க்கு அனுப்பி உள்ள நோட்டீசில் கூறியுள்ளதாவது:
யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்ட சின்னம். அந்த சின்னத்தை எங்களை தவிர இந்தியாவில் வேறு யாரும் பயன்படுத்தவில்லை. தேர்தல் கமிஷன் விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னத்தைப் போன்றோ,கொடிபோன்றோ மற்ற கட்சிகள் பயன்படுத்தமல் இருப்பது அக்கட்சிகளின் தார்மிக பொறுப்பாகும். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என நாங்கள் ஆட்சேபம் தெரிவித்த பிறகும் கூட நீங்கள் அதை அகற்றவில்லை. 5 நாட்களுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருந்து யானை சின்னத்தை எடுக்காவிட்டால் சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும். இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

