எம்புரான் படத்தில் அவதுாறு காட்சிகளை நீக்குங்கள்: சீமான்
எம்புரான் படத்தில் அவதுாறு காட்சிகளை நீக்குங்கள்: சீமான்
ADDED : ஏப் 01, 2025 09:24 PM
சென்னை:'எம்புரான் திரைப்படத்தில், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான, அவதுாறு காட்சிகளை நீக்க வேண்டும்' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தென் மாவட்டங்களில், முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், முல்லை பெரியாறு அணை தொடர்பாக, கேரள அரசு பலமுறை தொடர்ந்த வழக்குகளை, உச்ச நீதிமன்றம் தீர விசாரித்தது. சிறப்பு பொறியியல் வல்லுனர் குழு அமைத்து, முழுமையாக ஆய்வு செய்து, அணை உறுதியாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்துள்ள, 'எம்புரான்' படத்தில், மத ஒற்றுமை குறித்து பேசுவோர், இன வெறுப்பை விதைத்தது ஏன்?
இரு மாநிலங்களிலும், இரண்டு மாநில மக்களும், பல்வேறு தொழில்களை நடத்தி, வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழர்கள், மலையாள மக்களுக்கு எதிரிகள் போலவும், கேரளாவை அழிக்க முயல்வது போலவும், வன்மத்துடன் சித்தரிப்பது, இனப்பகையை துாண்டி, இரு மாநில மக்களிடையே, கலவரத்தை ஏற்படுத்த முனையும் திட்டமிட்ட சதியாகும்.
எனவே, எம்புரான் படத்தில், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும், அவதுாறு பரப்புரை காட்சிகளை நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி:
மலையாளத்தில் எடுக்கப்பட்ட, 'எம்புரான்' திரைப்படம், பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளது.
இப்படத்தில், நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அதை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், திருவிதாங்கூர் மன்னர் காலத்தில், வெள்ளையர்களால் மிரட்டி, 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் வசனம் இடம் பெற்று உள்ளது.
திருவிதாங்கூர் மன்னர் சென்று விட்டார்; வெள்ளையர்கள் சென்று விட்டனர். ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில், அந்த அணை மட்டும், கேரளாவை காவு வாங்க காத்திருக்கிறது என்பது போன்ற வசனங்கள் உள்ளன. நான்கு இடங்களில், முல்லைப் பெரியாறு அணையை குறி வைத்து, வசனங்கள் இடம் பெற்றிருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது.
உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது எனக் கூறிய பிறகும், அதற்கு எதிரான கருத்துக்களை, படத்தில் இடம் பெற அனுமதித்திருக்கக் கூடாது.
எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக, தமிழின விரோத கருத்துகளைக் கொண்ட, 'எம்புரான்' திரைப்படத்திற்கு வழங்கியுள்ள தணிக்கை சான்றிதழை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் 'எம்புரான்' படம் திரையிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

