மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் கட்டட உயர கட்டுப்பாடு அரசாணை ரத்து: உயர் நீதிமன்றத்தில் தகவல்
மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் கட்டட உயர கட்டுப்பாடு அரசாணை ரத்து: உயர் நீதிமன்றத்தில் தகவல்
ADDED : நவ 07, 2024 07:00 AM

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் உள்ள விதி மீறல் கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில், 'கட்டடங்களுக்கு உயர கட்டுப்பாடு நிர்ணயித்த அரசாணையை உயர் நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளது' என, மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை குமார் 2011ல் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச் சுவரிலிருந்து 1 கி.மீ.,சுற்றளவில் 9 மீ., உயரத்திற்கு மேல், விதிகளை மீறி பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை கோவில் கோபுரங்களை மறைக்கும் வகையில் உள்ளன. விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆக., 6ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு: விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 1869 கட்டடங்களின் உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட கட்டட திட்ட வரைபடத்தை மாநகராட்சி கமிஷனர், உள்ளூர் திட்டக் குழுமத்திடம் (எல்.பி.ஏ.,) சமர்ப்பிக்க வேண்டும். விதிமீறல் இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது.
மாநகராட்சி தரப்பு: இந்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
அவர்கள், 'கோவிலைச் சுற்றிலும் 1 கி.மீ., சுற்றளவில் 9 மீ., உயரத்திற்கு மேல் கட்டுமானம் கட்டக்கூடாது என 1997ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசாணை தற்போது அமலில் இல்லை. அது தங்களுக்கு பொருந்தாது. இக்கட்டடங்கள் 1997க்கு முன் கட்டப்பட்டவை. விதிமீறல் எதுவும் இல்லை,' என ஆட்சேபனை தெரிவித்தனர். உயரக்கட்டுப்பாடு தொடர்பான அந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துவிட்டது. இவ்வாறு தெரிவித்தது.
மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. நீதிபதிகள் நாளைக்கு (நவ.,8) ஒத்திவைத்தனர்.