யானை வழித்தடங்கள் குறித்த அறிக்கை 2026 பிப்ரவரியில் அரசிடம் தாக்கல் ஐகோர்ட்டில் வனத்துறை தகவல்
யானை வழித்தடங்கள் குறித்த அறிக்கை 2026 பிப்ரவரியில் அரசிடம் தாக்கல் ஐகோர்ட்டில் வனத்துறை தகவல்
ADDED : நவ 02, 2025 12:44 AM
சென்னை: 'தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்கள் முழு மையாக கண்டறியப்பட்டு, அதுகுறித்த இறுதி அறிக்கை, வரும் பிப்ரவரி மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், வனத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் யானைகள் வழித்தடங்கள் தொடர்பாக, விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வனத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் வாதாடியதாவது:
ஒருங்கிணைந்த யானை கள் வழித்தடங்களை கண்டறிந்து, அதுபற்றிய விபரங்களை தாக்கல் செய்ய, தமிழக அரசால் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆவணங்கள் மற்றும் உள்ளூர் கள ஆய்வுகள்படி, மாதிரி அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதை வைத்து, சம்பந்தப்பட்ட பகுதியில் நேரடி ஆய்வு செய்து, அறிக்கை இறுதி செய்யப்படும்.
யானை வழி த்தடங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் குறித்து, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும்; அதைத் தொடர்ந்து, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும்.
பின், யானை வழித்தடங்கள் தொடர்பான இறுதி அறிக்கை, அடுத்தாண்டு பிப்ரவரியில், தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், இது தொடர்பாக அடுத்தக் கட்ட நடவடிக்கை கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையை வரும், 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

