குடியரசு தின கொண்டாட்ட பரிசளிப்பு; கவர்னரை புறக்கணித்த தமிழக அரசு
குடியரசு தின கொண்டாட்ட பரிசளிப்பு; கவர்னரை புறக்கணித்த தமிழக அரசு
ADDED : ஜன 28, 2025 05:51 AM

சென்னை : குடியரசு தின விழா பரிசுகளை, கவர்னர் ரவிக்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாட்டம், சென்னை காமராஜர் சாலையில் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் விழா நடந்தது. இதில், கவர்னர் ரவி, தேசியக்கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
வேளாண் விருது
வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், சமூக நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது, சாகுபடி சாதனைக்கான வேளாண் விருது, சிறந்த போலீஸ் நிலையத்திற்கான முதல்வர் கோப்பைகள், காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்டவற்றை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
வழக்கமாக சிறந்த கலை நிகழ்ச்சி மற்றும் அலங்கார ஊர்திகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். அவற்றை, கிண்டி ராஜ்பவனில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் வழங்குவது வழக்கம். ஆனால், பரிசு பெற்றவர்கள் விபரம் கவர்னருக்கு தெரிவிக்கப்படவில்லை. அதனால், கவர்னரால் அந்த பரிசுகளை வழங்க முடியவில்லை.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று காலை பரிசளிப்பு விழா நடந்தது. இதில், கலை நிகழ்ச்சி மற்றும் அலங்கார ஊர்திகளுக்கான பரிசுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலர் முருகானந்தம், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், துணை செயலர் பத்மஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி மாணவியருக்கான கலை நிகழ்ச்சிகளில், சென்னை கொளத்துார் எவர்வின் பள்ளிக்கு முதல் பரிசு, மயிலாப்பூர் சிறுவர் தோட்டம் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டாம் பரிசு, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
ராணிமேரி கல்லுாரி
கல்லுாரி அளவிலான கலை நிகழ்ச்சிகளில், ராணிமேரி கல்லுாரிக்கு முதல் பரிசு, அம்பத்துார் சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரிக்கு இரண்டாம் பரிசு, குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் கல்லுாரிக்கு, மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில், விளையாட்டு துறை ஊர்திக்கு முதல் பரிசும், காவல் துறை ஊர்திக்கு இரண்டாம் பரிசும், ஹிந்து அறநிலையத்துறை ஊர்திக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.

