ADDED : ஜன 27, 2025 03:38 AM

சென்னை: தமிழகம் முழுதும், அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில், குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், எழும்பூர், தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள அலுவலகத்தில், அதன் செயலர் அன்சுல் மிஸ்ரா, தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வளாகத்தில், மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி, மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
கோயம்பேடில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை, கொடி ஏற்றி, பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
மின்வாரியத் தலைவர் நந்தகுமார், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார்.
சென்னையில் உள்ள, அரசு விரைவு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில், மேலாண் இயக்குனர் மோகன், கொடி ஏற்றினார். சிறந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள், கிளை மேலாளர்கள், நிர்வாக பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில், அதன் மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், தேசிய கொடி ஏற்றினார்.
அவரும், சிறந்த பணியாளர்களுக்கும், திருக்குறள் ஒப்பித்தல், ஓவியம், கவிதை, பேச்சு, பாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.

