முதுமலையில் குடியரசு தினவிழாவளர்ப்பு யானைகள் அணிவகுப்பு
முதுமலையில் குடியரசு தினவிழாவளர்ப்பு யானைகள் அணிவகுப்பு
ADDED : ஜன 27, 2024 08:44 AM

கூடலுார், ஜன. 27- -
முதுமலையில், வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசிய கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், ஆண்டு தோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில், வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசிய கொடியேற்றப்படும்.
அதன்படி, தெப்பக்காடு யானைகள் முகாமில் நேற்று குடியரசு தின விழாவில், வளர்ப்பு யானைகள் வரிசையாக அணி வகுத்து நிற்க, அதன் மீது பாகன்கள் தேசிய கொடியை ஏந்தி அமர்ந்திருந்தனர். யானைகளின் முன், வன ஊழியர்கள் அணிவகுத்து நின்றனர்.
நிகழ்ச்சியில், தெப்பக்காடு யானைகள் முகாம் வனச்சரகர் மேகலா தேசிய கொடி ஏற்றினார்.
அப்போது, வன ஊழியர்கள் மரியாதை செலுத்த; வளர்ப்பு யானைகளும் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின. இதனை, அங்கு கூடியிருந்த திரளான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

