குடியரசு தின ஊர்தி அணிவகுப்பு: தமிழகம் தேர்வாகாததன் பின்னணி
குடியரசு தின ஊர்தி அணிவகுப்பு: தமிழகம் தேர்வாகாததன் பின்னணி
ADDED : டிச 24, 2024 04:02 AM

சென்னை: குடியரசு தின விழாவையொட்டி, டில்லியில் நடக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்க, தமிழகம் தேர்வு செய்யப்படாததன் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, 26ல், டில்லியில் குடியரசு தின விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அன்றைய தினம் நடைபெறும் அணிவகுப்பில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், அலங்கார வாகன ஊர்திகள் இடம்பெறும்.
பாரம்பரியம், வளர்ச்சி
இதன்படி, அடுத்த மாதம், 26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, 15 மாநிலங்களின் ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இதில், தமிழகம் இடம் பெறவில்லை. ஏழு கட்டமாக நடந்த தேர்வுகளின் அடிப்படையில், மாநிலங்களின் ஊர்திகள் தேர்வாகி உள்ளன.
அதாவது, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ஹரியானா, திரிபுரா, ஆந்திரா, கர்நாடகா, ஜார்க்கண்ட், கோவா, பீஹார், பஞ்சாப், உத்தரகண்ட், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களின் ஊர்திகள் தேர்வாகியுள்ளன.
தமிழக ஊர்தி தேர்வு செய்யப்படாதது குறித்து, தமிழக செய்தித்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது:
குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில், தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி மறுப்பு என்ற செய்தி வந்துள்ளது. ஊர்திக்கான இந்த ஆண்டு கருப்பொருள், பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி என்பதாகும்.
திருப்தி அடையவில்லை
இதுதொடர்பாக நடந்த ஆறு கூட்டத்தில், செய்தித்துறை அலுவலர்கள் பங்கேற்று, வரைபட மாதிரிகள், கருப்பொருள் பாட்டு தயாரித்து சமர்ப்பித்தனர். தேர்வு குழுவினர் கூறிய திருத்தங்களையும் சரி செய்து கொடுத்தனர்.
முதல் கூட்டத்தில், கீழடி வரைபடங்கள் வழங்கப்பட்டன. வளர்ச்சி குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இரண்டாம் கூட்டத்தில், கீழடியில் கிடைத்த பொருட்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
வளர்ச்சி குறித்து அவர்கள் கேட்டதற்கு, 'கீழடியில் கிடைத்த பொருட்களால் கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஒரு பாடல் எழுதி இசையமைத்தும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து திருத்தங்கள் செய்தும், தேர்வு குழுவினர் திருப்தி அடையவில்லை. எனவே, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்.
வேண்டுமானால், வாகனத்தை தயாரித்து, செங்கோட்டையில் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டனர்.கடந்த ஆண்டு மத்திய அரசு, அலங்கார ஊர்திகள் தேர்வு தொடர்பாக, ஒரு ஒப்பந்தம் தயார் செய்தது.
அனுமதி கிடைக்கவில்லை
அதில், 'ஒவ்வொரு ஆண்டும் மத்திய பிரதேசம், குஜராத், பீஹார், ஆந்திரா மாநிலங்களின் ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்கும். மற்ற, 12 மாநிலங்கள் சுழற்சி முறையில் வரும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், தமிழக செய்தித்துறை அலுவலர்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு, தமிழக அரசின் ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்று பரிசு வாங்கியது. இம்முறை ஒப்பந்த அடிப்படையிலும், சிறப்பாக மாதிரி அமையாததாலும், ஊர்திக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.